‘சாரா’ திரைப்படத்தை, ‘விஷ்வா ட்ரீம் வேர்ல்ட்’ சார்பில், ஸ்ரீ பட்டவன் தயாரித்துள்ளார். சாக்ஷி அகர்வால், அம்பிகா, விஜய் விஸ்வா, பொன்வண்ணன், யோகி பாபு, தங்கதுரை, ‘ரோபோ’ சங்கர், மிரட்டல் செல்வா ஆகியோருடன், கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் செல்லக்குட்டி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைத்திருக்கிறார், கார்த்திக் ராஜா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜெ. லக்ஷ்மன் குமார்.
நட்பினை, வலுக்கட்டாய காதலாக மாற்றினால் என்ன நடக்கும்? என்பது தான் சாரா படத்தின் மையக்கரு.
செல்லக்குட்டி, சாக்ஷி அகர்வால். இருவரும் பள்ளி பருவத்து நண்பர்கள். பள்ளித் தேர்வில், தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்ய முயற்சிக்கிறார் சாக்ஷி அகர்வால். அதிலிருந்து காப்பாற்றும் செல்லக்குட்டி, பள்ளி இறுதி தேர்வில் சாக்ஷி அகர்வாலுக்காக தேர்வு எழுதுகிறார். வெற்றியும் பெறுகிறார். அதன்பிறகு இருவரும் வெவ்வேறு திசையில் பயணிக்கின்றனர்.
வருடங்கள் சென்ற நிலையில், ரோட்டில் மயங்கி விழும் செல்லக்குட்டியின் அம்மா அம்பிகாவை காப்பாற்றுகிறார், சாக்ஷி அகர்வால். இதனால், இவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகிறது. முன்னணி கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வரும் சாக்ஷி அகர்வாலின் கீழ், கொத்தனாராக வேலை செய்து வருகிறார், செல்லக்குட்டி. இருவரும் சந்தித்து நட்பை புதுப்பித்து கொள்கின்றனர்.
சாக்ஷி அகர்வால், தனது காதலரான விஜய்விஷ்வாவுடனான திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில், தன்னை காப்பாற்றியது செல்லக்குட்டியின் பள்ளிப்பருவத்து தோழி என, அம்பிகாவிற்கு தெரிய வருகிறது. இதனால், செல்லக்குட்டியை சாக்ஷி அகர்வாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கு சாக்ஷி அகர்வால், எதிர்ப்பு தெரிவிக்கிறார். சாக்ஷி அகர்வாலுக்கு யாருடன் திருமணம் நடந்தது? என்பது படத்தின் மீதிக் கதை.
படத்தலைப்பின் பெயரான ‘சாரா’ கதாபாத்திரத்தில் வரும் சாக்ஷி அகர்வால், குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும், இயக்குநர் செல்லக்குட்டி, இலக்கணங்களையும், வரைமுறைகளையும் உடைத்து, தன் இஷ்டம் போல் நடித்துள்ளார். பல காட்சிகளில் இவருடைய மிகை நடிப்பு, ரசிகர்களிடம் இருந்து விலகி நிற்கிறது. செல்லக்குட்டியின் அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகா, தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். சாக்ஷியின் தந்தையாக நடித்திருக்கும் பொன்வண்ணன், குறைந்த காட்சிகளில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பு. இயக்குநர் செல்லக்குட்டி வித்தியாசமான கதையை யோசித்திருந்தாலும், அதை திரைக்கதையாக உருவாக்குவதில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.