‘சதுரங்க வேட்டை’ படத்தின் பாணியில் வெளிவந்துள்ள திரைப்படம், நிர்வாகம் பொறுப்பல்ல. இதில் ஸ்ரீநிதி, ஆதவன் , லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார், கார்த்தீஸ்வரன. இசையமைத்திருக்கிறார், ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார், என்.எஸ். ராஜேஷ்.
அதிக வட்டி, குறைந்த நாட்களில் பணம் இரட்டிப்பு போன்ற பல்வேறு கவர்ச்சித் திட்டங்களின் பேரில் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசமில்லாமல் ஏமாற்றுபவர், கார்த்தீஸ்வரன். சுமார் 5 ஆயிரம் கோடிகளுக்கு மேல் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார். மக்கள் இவர் மீது போலீஸில் புகார் கொடுக்க, அவரைத் தேடி வருகிறது போலீஸ். இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீநிதியிடம் காதல் வலை வீசுகிறார், கார்த்தீஸ்வரன். ஶ்ரீநிதி, அந்த வலையை தனக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்டு, கார்த்தீஸ்வரனை கைது செய்யதிட்டமிடுகிறார். திட்டமிட்டபடி கைது செய்தாரா? இல்லை, காதல் வலையில் விழ்ந்தாரா? ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் மீதிக் கதை.
தூக்கு தண்டனை நிறைவேற்றும் கடைசி நாளில், கார்த்தீஸ்வரன் தரும் வாக்குமூலமாக கதை விரிகிறது. இந்தகாட்சி, க்ளைமாக்ஸில், நீதி பரிபாலனங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் கார்த்தீஸ்வரன், ஸ்ட்ரிப் டீஸ் (Striptease) தொடங்கி, 500 ரூபாய்க்கு இரண்டு போன், அதிக வட்டி, பணம் இரட்டிப்பு, இன்னபிற ஆன்லைன் மோசடிகள் போன்ற நடந்த, நடந்து வரும் குற்ற சம்பவங்களை விலாவரியாக, மக்கள் திருந்தும் வண்ணத்தில் இந்தப்படத்தினை கொடுத்துள்ளார். மக்களின் பேராசையே எல்லா மோசடிகளுக்கும் மூல தனம் என்பதை உரக்கச்சொல்லியிருக்கிறார். சிறிய எழுத்துக்களால் எழுதப்பட்ட நிபந்தனைகளை, சரியாக படிக்காது போனால் எத்தகைய விளைவுகளை சந்திக்க நேரும் என்பதை, எடுத்து சொன்ன விதம் சிறப்பு. இது கொஞ்சம் ரசிக்கும்படியாகவும் படமாக்கப்பட்டுள்ளது.
நடித்து இயக்கியிருக்கும் கார்த்தீஸ்வரன், நடிப்பு, ஆடல், பாடல், அடிதடி, நகைச்சுவை எல்லாவற்றையும் தொட்டுள்ளார். மோசடி மன்னன் ‘கே’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன் தோற்றமும், நடிப்பும் ஓகே தான். கைது செய்யப்பட்டால், என்ன நடக்கும் சட்டம் எப்படி இயங்கும். அதிகார வட்டம் என்னென்ன செய்யும் என்பது. சம்காலத்தில் நடந்து வரும் பல குற்றச்செயல்களை நினைவூட்டுவதாக இருக்கிறது.
காவல் ஆய்வாளராக, ஸ்ரீநிதி. கம்பீரமான அழகு. நடிப்பதற்கு பெரிதான வாய்ப்பு இல்லை. என்றாலும் கிடைத்த காட்சிகளில் ஒகேவான நடிப்பினை கொடுத்துள்ளார்.
கார்த்தீஸ்வரனின் ஸ்ட்ரிப் டீஸ் (Striptease) மோசடியில் சிக்கும் அப்பாவி இளைஞராக பிளாக் பாண்டி, பணம் இரட்டிப்பில் சிக்கும் அப்பாவி கொழிப்பண்ணை உரிமையாளர் லிவிங்ஸ்டன், மிருதுளா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
என் எஸ் ராஜேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. மணாலி காட்சி, அழகாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் வழக்கமான துள்ளல் ரகம்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநரையும், படக்குழுவினரையும் பாராட்டலாம்.