’தலைவர் 173’: ‘அப்டேட்’ கொடுத்த ரஜினிகாந்த்!

புத்தாண்டு பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு தன்னை கான வரும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. இந்நிலையில்
பொங்கல் பண்டிகையை ஒட்டி,இன்று காலை தனது இல்லத்தின் முன் குவிந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கை அசைத்து, கும்பிட்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன் அதிகளவில் திரண்டதால்,

அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். முதல் முறை ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்ககளை சந்தித்தபோது,அவரை ரசிகர்கள் சரியாக பார்க்க முடியவில்லை என கூறி தலைவா தலைவா, சரியாக உங்களை பார்க்க முடியவில்லை தலைவா என கோஷமிட்டனர் அதனை ஏற்று இரண்டாம் முறையாக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.இந்நிலையில், மீண்டும் ரசிகர்கள் ‘உங்களை பார்க்க வேண்டும் தலைவா’ என தொடர்ந்து கூச்சலிட்ட படியே இருந்தனர். இதையடுத்து மூன்றாவது முறையாக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். குறிப்பா இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு.அவங்க சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமா இருக்க முடியும்” என்றவர் தனது அடுத்தபடம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,, “இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்  நான் நடிக்கும் புதிய படம் வரும் ஏப்ரலில் தொடங்கும். அந்த படம் எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொழுதுபோக்கு கமர்ஷியல் படமாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்