‘மாயபிம்பம்’ திரைப்படத்தை, Selfstart Productions நிறுவனம் சார்பில், கே ஜே சுரேந்தர் தயாரித்து, அவரே கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இதில், ஆகாஷ், ஜானகி இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்க, ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், நந்தா.
ஆகாஷ், மருத்துவக் கல்லூரி மாணவர். ஜானகி, மருத்துவ மனை ஒன்றில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொள்கின்றனர். இருவருக்குமிடையே காதல் உருவாகிறது. ஆனால், அதை ஆகாஷ் ஒரு கோணத்திலும், ஜானகி வேறு ஒரு கோணத்திலும் பார்க்கின்றனர். ஆகாஷ் சொல்லும் ஒரு பொய்யினால், இருவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய சோகம் நடக்கிறது. அது என்ன என்பதே, ‘மாயபிம்பம்’ படத்தின் கதை.
இப்படத்தில் நடித்த ஒரு சிலரைத்தவிர, அனைவரும் புதுமுகங்களே. இருந்த போதும் மிகச்சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள். மிக இயல்பான நடிப்பினை கொடுத்து அசர வைக்கின்றனர். ஜானகி அழுத்தமான கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆகாஷிடம் தனது காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் மிகச்சிறப்பான நடிப்பு. நண்பனது அறையில் ஆகாஷ் தன்னிடம் அத்து மீறும் தருணத்தில், தனது பார்வையினால் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, அபாரம்.
ஆகாஷூம் நடிப்பில் குறைவைக்கவில்லை. ஜானகி, தன் மீது கொண்டிருக்கும் காதலை நினைத்து கலங்கும் காட்சிகளிலும், வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் பேசாதது குறித்து, நண்பனிடம் கவலை கொள்ளும் போதும் பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறார்.
ஆகாஷின் நண்பர்களாக நடித்திருப்பவர்களில் கேபிள் கனெக்ஷன் உரிமையாளராக நடித்திருப்பவர் ரசிகர்களை எளிதில் ஈர்த்து விடுகிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் அவர் அடிக்கும் லூட்டியினால், நேரம் போனது தெரியவில்லை. மற்ற நண்பர்களும் அந்தந்த கதாபாத்திரத்தில் பளிச்சிடுகின்றனர். இவர்களைப் போலவே ஆகாஷின் அப்பா, அம்மா, அண்ணன் என நடித்த குடும்ப உறுப்பினர்கள் கூட நன்றாகவே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சகாயின் ஒளிப்பதிவு, கதைக்கேற்றபடி அமைந்திருக்கிறது. இசையமைப்பாளர் நந்தாவின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. ‘டெப்போவில நுழையாத பஸ்ஸே இல்ல..’ பாடல் இளைஞர்களை எளிதில் கவரும்.
எழுதி இயக்கியிருக்கும் கே.ஜே.சுரேந்தர், அழுத்தமான காதல் கதையை, ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. ஒருவரைப்பற்றி தெரிந்து கொள்ளாமலேயே அவர் மீது நாம் கொண்டிருக்கும் தவறான எண்ணம் எத்தைகைய கொடுமையானது. என்பதை, காதல் வழியாக ஜாலியாக, எமோஷனலாக சொல்லி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார், இயக்குநர் கே.ஜே.சுரேந்தர். ஒரு சில குறைகள் இருந்தாலும், அவரை தாராளமாக பாராட்டலாம்.
‘மாயபிம்பம்’ – அபலைப்பெண்ணின் காதல்!