திரௌபதி 2, திரைப்படத்தை ‘நேதாஜி புரொடெக்ஷன்’ சார்பில், சோலா. சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். இதில் நட்டி நடராஜ், ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன் , ஒய். ஜி. மகேந்திரன், வேலராமமூர்த்தி, தேவயானி சர்மா , பரணி, திவி , சரவண சுப்பையா, அருணோதயன், லட்சுமணன், சிராக் ஜானி , தினேஷ் லம்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அண்ணல் கண்டர் எழுதிய, ‘திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகாராஜா வரலாறு’ என்ற நூலை தழுவி கதை எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் மோகன் G. ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிலிப்ராஜ் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்சிடிவான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பரபரப்பை கிளப்பும் இயக்குநர் மோகன் G, இந்த முறையும் உண்மை சம்பவங்களை அதாவது, துக்ளக் மன்னர்களின் படையெடுப்பின் போது மதமாற்றம் நடந்தததையும், கோயில் நிலங்கள் வக்ஃப் போர்டுக்கு சொந்தமானதையும் கற்பனை கலந்து சொல்லியிருக்கிறார்.
அண்மையில், திருச்சி மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள, திருச்செந்துறை கிராமத்தில் வசிக்கும் ராஜகோபால் என்பவரது ஒரு ஏக்கர் நிலம், வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என ஒரு பிரச்சனை எழுந்தது அல்லவா? அதேபோல் ஒரு சம்பவம் படத்தின் முதல் காட்சியிலேயே இடம் பெறுகிறது. அதை தொடர்ந்து, மறுஜென்மத்தில் பிறந்திருக்கும் ரிச்சர்ட் ரிஷியை சுற்றி கதை நடக்கிறது.
வெளிநாட்டில் இருந்து வரும் ரக்ஷனா இந்துசூடன், திருவண்ணாமலையில் இருக்கும் தங்களது குல தெய்வக்கோயிலை அங்கு வசித்து வரும் ரிச்சர்ட் ரிஷியின் மேற்பார்வையில் புணரமைக்க விரும்புகிறார். அப்படி அந்த கோயிலை மேற்பார்வையிடும் சமயத்தில், ரக்ஷனா இந்துசூடனுக்கு14ஆம் நூற்றாண்டில் நடந்த பூர்வ ஜென்ம ஞாபகங்கள் நினைவுக்கு வருகிறது. அதன் பிறகு என்ன நிகழ்ந்தது? என்பதை சர்ச்சைக்குரிய வகையில் பரபரப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குநர் மோகன் G.
14ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் முகமது பின் துக்ளக் கைவசம் வந்தது. அப்போது முஸ்லீம் அல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட வரியைக் கேட்டு, பெண்கள் மீது நடத்தப்பட்ட பலாத்கார துன்புறுத்தல்கள். ஆண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத்தாக்குதல்கள் என மக்கள் கொடுமைப் பட்ட கொடூரங்களை படமாக்கிய விதம் பதைபதைக்கிறது. கட்டாய மதமாற்றமும் பகீர் கிளப்புகிறது.
துக்ளக்கின் அந்த கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போரிட்ட திருவண்ணாமலைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் வீர வல்லாளர், வீரசிம்ம காடவராயர் போன்றவர்களின் செயலும், தியாகமும் ஈடு இணையற்றது.
வீரவல்லாளர் கதாபாத்திரத்தில் நடித்த நட்டி நடராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்ப்பது போல் நடித்திருக்கிறார்.
வீரசிம்ம காடவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சர்ட்டின் நடிப்பு, ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் தனிக்கவனம் பெறுகிறார்.
திரௌபதி கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் வசீகரமான தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடுகிறது.
முகலாய மன்னர்கள் மற்றும் அவரின் கீழ் நடித்திருப்பவர்கள் மிரட்டுகிறார்கள். குறிப்பாக, துக்ளக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிராக் ஜானி, மதுரை தம்பானியாக நடித்திருக்கும் தினேஷ் லம்பா உள்ளிட்டோர் கொடூரமானவர்களாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வசிக்கும் ராம்நாமி, பழங்குடி இனத்தவராக ஒய்.ஜி. மகேந்திரன் சில காட்சிகல் மற்றும் ஒரு பாட்டில் நடித்து, கவனம் ஈர்க்கிறார். அவரோடு பயணிக்கும் பரணி, மற்ற கதாபாத்திரங்களில் நடித்த வேல. ராமமூர்த்தி, தேவயானி சர்மா , திவி , சரவண சுப்பையா, அருணோதயன், லட்சுமணன் ஆகியோரும் கவனம் பெறுகிறார்கள்.
படம்பிடிக்கப்பட்ட லெகேஷன்கள் , கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்பங்களும் பெரிதாக குறை சொல்லும்படி இல்லை. உடைகள் வடிவமைப்பு, அரங்க வடிவமைப்புகளும் சிறப்பாகவே இருக்கிறது.
ஜிப்ரானின் இசையும், பாடல்களும் படத்தின் பெரும்பலமாக இருக்கிறது. அது போலவே பிலிப்ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவும் சிறப்பு.
ஆங்காங்கே சில குறைகளும் இருக்கிறது. திரைக்கதையில் சுவாரசியத்திற்கும் பரபரப்பிற்கும் இடமிருந்தும் அது சரியாக மேற்கொள்ளப்படவில்லை. போதிய விறுவிறுப்பு இல்லாததும் ஒரு குறைதான். மற்றபடி, வரலாற்றில் நடந்த ஒரு பகுதியை படமாக்கி பரபரப்பாக்கியிருக்கிறார், மோகன் G. அது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.