‘கே 7 ஸ்டுடியோ’ சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ், சி. தேவதாஸ், ஜெயா தேவதாஸ் ஆகியோரது தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ஜாக்கி. எழுதி, இயக்கியுள்ளார் டாக்டர் பிரகபல். இதில், யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி , பாத்மென், யோகி , சாய்தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைத்திருக்கிறார், சக்தி பாலாஜி, பி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார், என் எஸ் உதயகுமார்.
கிடா சண்டையும், அதை சுற்றி நடக்கும் வெட்டு குத்து தான் ஜாக்கி. மதுரை, ஒத்தக்கடைப் பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டிவரும் நாயகன் யுவன் கிருஷ்ணா. கிடா சண்டையில் ஆர்வம் கொண்டவர். மதுரையில் மீன் வியாபாரம் செய்துவரும் பெரும்புள்ளி எதிர் நாயகன் ரிதன் கிருஷ்ணா. இவரும் கிடா சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தொடர்ந்து ஜெயித்துவரும் அவர், ஜெயிப்பதற்கு எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியவர்.
மதுரையில் நடக்கும் ஒரு கிடா சண்டையில், ரிதன் கிருஷ்ணாவின் கிடாவினை, யுவன் கிருஷ்ணாவின் கிடா தோற்கடித்து விடுகிறது. இதனால், கடும் அவமானமும், விரக்தியும் அடையும் ரிதன் கிருஷ்ணா, யுவன் கிருஷ்ணாவின் வீட்டை தாக்கி, அவருடைய அக்காவையும் அவமானப்படுத்தி விடுகிறார். விளையாட்டு இரு தரப்பிலும் வெறியாக மாறுகிறது. இவர்களுடைய சண்டையை, ஊர்ப்பெரியவர் மதுசூதன் ராவ், மீண்டும் ஒரு கிடா சண்டைப்போட்டி நடத்தி முடித்து வைக்க தீர்மானிக்கிறார். அவர்களின் சண்டை முடிவுக்கு வந்ததா? யாருடைய கிடா வெற்றி பெற்றது?
யுவன் கிருஷ்ணாவும் , ரிதன் கிருஷ்ணாசும் மோதும் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. கதைக்களத்திற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் வன்முறை. தோற்றுப்போன கிடாவை வெட்டும் காட்சியில் ரிதன் கிருஷ்ணாவின் வில்லத்தனம் அபாரம். அகங்காரத்தையும், தோல்வியை தாங்கமுடியாத மனிதனாக, ஆனவத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
நாயகன் யுவன் கிருஷ்ணா ஆட்டின் மீது பாசம் கொண்டவராக போட்டியை போட்டியாக கருதும் மனநிலை கொண்டவராக அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். அம்மு அபிராமியை காதலிக்குக் காட்சிகளிலும் சபாஷ் போடவைக்கிறார்.
அம்மு அபிராமி, யுவனை காதலிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும் குறிப்பிடும்படி நடித்துள்ளார்.
மதுசூதன் ராவ், ஊர்ப்பெரியவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கம்பீரமான தோற்றம் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.
சித்தன் மோகன், சரண்யா ரவி, பாத் மென்,யோகி , சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா போன்றோரும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.
கிடாக்கள் மோதிக் கொள்ளும் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் என் .எஸ் உதயகுமார். இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் பின்னணியும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
கிடா சண்டைக்காட்சிகளை பரபரப்பாக தொகுத்திருக்கிறார், படத்தொகுப்பாளர் என் பி ஸ்ரீகாந்த்.
கிடா சண்டையைப்பற்றிய முதல் தமிழ் படம். அதிரடி ஆக்ஷன் பிரியர்கள் ரசிக்கும் படியான, ஒரு ஆவரேஜ் படம்.