நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்த நிலையில்,தணிக்கை குழு சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், குறிப்பிட்ட தேதியில் இப்படம் வெளியாகவில்லை.‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, படத்தை தயாரித்த கே.வி.என். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். இதையடுத்து தணிக்கை வாரியம், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்து தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது.மேலும் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றது. ஆனால் இவ்வழக்கை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை உயர்நீதி மன்றத்திலேயே தீர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது..இருதரப்புக்கும் இடையே நடந்த காரசார விவாதத்தை அடுத்து, நீதிமன்றம் திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறுவதற்கு முன்னரே எப்படி வெளியீட்டு தேதியை அறிவிக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியது.மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் கூறியதோடு இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பய் ஒத்தி வைத்தது இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை முதல் வழக்காக ஜனநாயகன் பட வழக்கை விசாரித்தது.தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பை வாசித்தது. அப்போது, ‘தணிக்க வாரியத்துக்கு உரிய அவகாசம் வழங்கப்படவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே தணிக்கை குழு வாரியத் தலைவர் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம்.மேலும் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி ஆஷாவின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷாவே முதலிலிருந்து விசாரிக்க வேண்டும். விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு உரிய அவகாசம் வழங்கி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு தேதி மேலும் தள்ளிப் போகலாம் என்றும் தெரிய வந்துள்ளது.இந்நிலையில் இதை எதிர்த்து படக்குழு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் இது குறித்து படக்குழு தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.