‘ரெட் லேபில்’  – விமர்சனம்!

ரெட் லேபில் திரைப்படத்தை, ‘ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில், லெனின் தயாரித்துள்ளார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் வழங்கியிருக்கிறது. பொன் பார்த்திபன் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், கே. ஆர் . வினோத். இதில், லெனின், அஸ்மின் , ஆர்.வி .உதயகுமார், அனு மோகன், முனிஸ்காந்த், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்திருக்க, கைலாஷ் மேனன் இசையமைத்திருக்கிறார்.

மக்கள் மீது அக்கறை இல்லாத எம் எல் ஏ ஆர் வி உதயகுமார்.  சாந்தமான அவருடைய மகள் அஸ்மினும், அடாவடியான மகனும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் படித்து வரும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர், லெனின் நியாயத்துகாக போராடும் குணம் கொண்டவர். இவர் மீது காவல்துறையில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இன்னும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால் 10 வருடங்கள் சிறை. இந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார், எம் எல் ஏ ஆர் வி உதயகுமாருக்கு வேண்டப்பட்ட இன்ஸ்பெக்டர்.

இவ்வாறான சூழலில், கல்லூரி தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் தலைவருக்காக போட்டியிடுகிறார், எம் எல் ஏ ஆர் வி உதயகுமாரின் மகன். அவர் தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை அடித்து விரட்டுகிறார். பலரும் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயங்கும் சூழ்நிலையில், முன்னாள் மாணவர் லெனினின் உதவியோடு ஒருவர் துனிந்து போட்டியிடுகிறார். இதனால், லெனினுக்கும் ஆர் வி உதயகுமாருக்கும் மோதல் உருவாகிறது. அஸ்மினும் லெனினை காதலிக்க துவங்குகிறார். மொத்தமாக லெனினை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே ரெட் லேபில் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகரைப்போல் அல்லாமல், பல படங்களில் நடித்த அனுபவசாலியைப்போல் நடித்திருக்கிறார். அவரது தோற்றமும் கவரும் விதமாகவே இருக்கிறது. பாடல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறார்.

கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் அஸ்மின், குறிப்பிடத்தக்க வகையில், படம் முழுவதும் நடித்து கவனம் ஈர்க்கிறார். பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார். வெற்றிப்படங்களின் இயக்குநர் ஆர்வி உதயகுமார், அலட்டலில்லாமல் வில்லனாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அவரின் உதவியாளராக நடித்திருக்கும் அனுமோகன், முனிஸ்காந்த், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ்குமார் ஆகியோரும் குறிப்பிடும் வகையில் நடித்துள்ளனர்.

சதீஷ் மெய்யப்பனின்  ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படம்பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் கைலாஷ் மேனனுக்கும் தமிழில் இது அறிமுகப்படம் தான், ஆனால் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது.

அறிமுக இயக்குனர் வினோத், கல்லூரிக்குள் நடக்கும் அரசியலையும், காதலையும் முன்னிறுத்தி ஒரு த்ரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். திரைக்கதையில், ஏற்பட்ட தொய்வுகளை நீக்கி, இன்னும் கூடுதல் சுவாரசியம் சேர்த்திருந்தால், எல்லோரும் ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.