‘மை லார்ட்’  –  விமர்சனம்!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘மை லார்ட்’  (My Lord). கதையின் நாயகனான சசிகுமார் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக சைத்ரா ஆச்சார் நடித்திருக்கிறார். இவர்களுடன் குரு சோமசுந்தரம், ஜெய பிரகாஷ், கோபி நயினார் மற்றும் வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்க, ஷான் ரோல்டன், இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அதிரி, புதிரி வெற்றிக்கு பிறகு சசிகுமாரும், ஜப்பான் படம் கொடுத்த ஏமாற்றத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகனும் இணைந்திருக்கும் படம் இது என்பதால், ரசிகர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது? பார்க்கலாம்.

சசிகுமார், வள்ளலாரின் போதனைகளோடு ஆதரவற்றோர்களுக்கான இல்லத்தில் வளர்ந்தவர். அதே இல்லத்தில் வளர்ந்த சைத்ரா ஆச்சாரை திருமணம் செய்து கொண்டு, விளிம்பு நிலை வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மனைவியின் மருத்துவ செலவிற்குக்காக வாங்கிய பணத்தை திருப்பி செலுத்தமுடியாத நிலையில், பெரும் போரட்டத்தை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஆட்சியை நிர்ணயம் செய்யும், சர்வ வல்லமை பொருந்திய, மத்திய அமைச்சரான ஆஷா சரத், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவரது இரண்டு சிறுநீரகங்களை மாற்றியே ஆக வேண்டிய நிர்பந்தம். இதை வெளியுலகுக்கு தெரியாமல் செய்ய முடிவு செய்கின்றனர். பல விதமான தேடல்களுக்குப்பிறகு, சசிகுமாரின் சிறுநீரகத்தை பெற முடிவு செய்து, அவரை அனுகுகிறது ஆஷாசரத் தரப்பு. சிறுநீரகத்தை பெற்ற பின்னர் சசிகுமாரையும் தீர்த்துகட்ட முடிவு செய்கிறார்கள். சசிகுமாரின் நிலை என்ன ஆனது? என்பது தான், ‘மை லார்ட்’.

வள்ளலார் சன்மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்ட, முத்து சிற்பி என்ற அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், சசிகுமார். வெகுச்சிறப்பான தனது கதாபாத்திரத்தின் தன்மையை க்ளைமாக்ஸில், எரிமலை வெடித்தமாதிரியான ஒரு பிரளயத்தை தனது நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தி, கதாபாத்திரமாகவே மாறிப்போய் ஆச்சர்யப்படுத்துகிறார். சசிகுமாரின் மனைவியாக சைத்ரா ஆச்சார். தைரியமான, குறும்பான பெண்ணாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கான சிறந்த தேர்வாக இருக்கிறார். கதாபாத்திரத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஆஷா சரத். ஏகபோக அதிகாரம் படைத்த மத்திய அமைச்சராக, வெகு இயல்பாக அந்த கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார். மிகச்சிறப்பான சரியான நடிப்பு. க்ளைமாக்ஸில், அதிகார தோரணையில் அவர் காட்டும் ஆச்சர்யம் அட்டகாசம். ‘மக்கள் குத்து’  பத்திரிகை ஆசிரியராக குரு சோமசுந்தரம். அவரது கதாபாத்திரத்தை ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

இவர்களைத்தவிர,  ஜெயப்பிரகாஷ், அருள் எழிலன், கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிகர், நடிகைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் சிறப்பாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் ராஜுமுருகன், நாட்டு நடப்பினை மிகச்சிறப்பாக படமாக்கியிருக்கிறார். உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் நடைபெற்று வரும் பித்தலாட்டங்களை அம்பலமாக்கி பகீர் கிளப்பியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘மை லார்ட்’ – எழுதப்படாத தீர்ப்பு!