ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், மைலாஞ்சி. எழுதி இயக்கியிருக்கிறார், அஜயன் பாலா. இசை, இளையராஜா. ஒளிப்பதிவு, செழியன். ‘அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில், டாக்டர். அர்ஜுனன் தயாரித்திருக்கிறார்.
ஊட்டியில் உறவினர் நடத்தி வரும் பறவைகள் விற்கும் பூங்காவை கவனித்து வருகிறார், கிரிஷா குரூப். சென்னையிலிருந்து ஊட்டிக்கு மாற்றலாகி வரும் மின்சார வாரியத்தில் வேலை செய்து வரும் இளைஞரை காதலிக்கிறார். சில மாதங்களுக்குப்பிறகு கிரிஷா குரூப்பின் காதலர் மீண்டும் சென்னைக்கு திரும்பிவிடுகிறார். இதற்கிடையில், வனவிலங்கு புகைப்படக்காரர் ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வருகிறார். கிரிஷா குரூப்புக்கும் ஸ்ரீராம் கார்த்திக்கிற்கும் நட்பு உருவாகிறது. அதை காதலாக எடுத்துக்கொள்கிறார், ஶ்ரீராம் கார்த்திக். ஒரு நாள் தனது காதலை வெளிப்படுத்த நினைக்கும்போது, சென்னைக்கு சென்ற தனது காதலரை கண்டுபிடிக்க உதவுமாறு கிரிஷா குரூப், ஶ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘மைலாஞ்சி’.
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக், ஆர்ப்பட்டமில்லாத அமைதியான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, ஆசையாக தனது காதலை சொல்ல வந்த நேரத்தில், கிரிஷா குரூப் இன்னொருவரை காதலிப்பதாக கூறும் காட்சியின்போது தனது ஏமாற்றத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிரிஷா குரூப், கதாபாத்திரம் சரியாக உருவாக்கப்படவில்லையோ? எனும் தோற்றத்தைக் கொடுப்பதால் அது குறித்து சொல்ல எதுவும் இல்லை! முனீஷ்காந்த், சிங்கம்புலி இருவரும் சிரிப்பினை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களால் சிரிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவாளர் செழியனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளுர்ச்சியூட்டுகிறது. இளையராஜாவின் இசை தாலாட்டுகிறது.
இயக்குநர் அஜயன் பாலா, காதல், காதலர்களின் உணர்வுகளை பழைய பாணியிலேயே, சுவாரசியமின்றி சொல்லியிருப்பதால் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை, இந்த மைலாஞ்சி!
‘மைலாஞ்சி’ – குளிர்ச்சியான ஒளிப்பதிவு. இனிமையான இசை.