சீதா பயணம் திரைப்படம், ‘ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ சார்பில் அர்ஜுன் சர்ஜா தயாரித்து, அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இதில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன் சுதீந்திரா, அர்ஜுன் சர்ஜா, துருவா சர்ஜா, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா, பித்திரி சதி, ஜெயராம், ஸ்ரீ ஹனுமந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்க, அனுப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார்.
மனைவியை இழந்த சத்யராஜ், தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனை உயிருக்கும் மேலாக பாவித்து, கண்ணுக்குள் வைத்து அன்பு செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யா அர்ஜூனும், தனது தந்தை சத்யராஜை, ‘அம்மா’ என்றழைத்து அழைத்து அன்பை பொழிந்து வருகிறார்.
இவ்வாறான சூழலில், சென்னையிலிருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் மதுரைக்கு தனியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சத்யராஜ் அரை குறை மனதுடன் வேறு வழியின்றி அனுப்பி வைக்கிறார். காரில் தனது பயணத்தை தொடங்கும் ஐஸ்வர்யா அர்ஜுன், மதுரைக்கு செல்லும் வழியில் பலவிதமான மனிதர்களின் மூலமாக பல தடைகளை சந்திக்கிறார். மற்றுமொரு தடங்களாக நிரஞ்சன் சுதீந்திரா, காரில் லிஃப்ட் கேட்டு ஏறிக்கொள்கிறார். இருவரும் பரஸ்பரம் பேசிக்கொண்டே செல்கின்றனர். ஒரு வழியாக ஐஸ்வர்யா அர்ஜூன் தங்கவிருக்கும் ஹோட்டலில் களேபரமாக இருக்கிறது. இவர் வருவதற்கு முன்னர், அந்த ஹோட்டலில் நடந்த பெரும் தீ விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். தடங்கல்கள் இல்லாமல், சரியான நேரத்திற்கு வந்திருந்தால், நாமும் உயிரிழந்திருப்போம். என எண்ணுகிறார். நீண்ட நிம்மதி பெருமூச்சுக்கு பிறகு, பயண வழியில் தடங்கல்களை ஏற்படுத்தியவர்களை சந்தித்திக்க முடிவு செய்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்ற சுவாரசியமான நிகழ்வுகள் தான், ‘சீதா பயணம்’.
இந்த சீதாவின் பயணத்தில் நாமும் சேர்ந்து செல்வது போல், ஒரு சுகமான அனுபவத்தை கொடுக்கிறது. படம் முழுவதுமே எந்தவிதமான முகம் சுழிக்கும் காட்சிகளின்றி, குடும்பத்துடன் ரசிக்கும் வண்ணமாக படைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, இயக்குநர் அர்ஜுன் சர்ஜாவை பாராட்டலாம்.
ஐஸ்வர்யா அர்ஜுன், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான, இயல்பான நடிப்பின் மூலமாக அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார். ஐஸ்வர்யா அர்ஜூனை காதலிக்கும் இளைஞராக, நிரஞ்சன் சுதீந்திராவும் மிகையில்லாத நடிப்பினை கொடுத்திருக்கிறார். சத்யராஜ், பாசமிக்க தந்தையாக பக்குவப்பட்ட நடிப்பின் மூலம், கதாபாத்திரத்தை இலகுவாக கையாண்டிருக்கிறார். நிரஞ்சன் சுதீந்திராவின் தாத்தாவாக பிரகாஷ் ராஜ், பலே நடிப்பினால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அரசியல் வாதியக நடித்திருக்கும் அர்ஜுன் சர்ஜாவும் அனுபவ நடிப்பால் மனம் நிறைகிறார்.
இப்படி படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான நடிப்பினை வழங்கியிருக்கிறார்கள்.
அனுப் ரூபன்ஸின் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. ஜி. பாலமுருகனின் ஒளிப்பதிவில், சீதாவின் பயணக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப் பட்டிருக்கிறது. படத்தின் முதல்பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி அதை ஈடு செய்து வேகமாக செல்கிறது.
‘சீதா பயணம்’ – குடும்பத்தோடு ரசிக்க!