நள்ளிரவில் கார் விபத்தில் சிக்கிய நடிகை தேவிப்ரியா! சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி !!

சின்னத்திரையில் ‘லட்சுமி”செல்லமாய்”சந்திரலேகா”சந்திரகுமாரி’ மற்றும் ‘செம்பருத்தி’ போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தேவிப்பிரியா. இவர், ‘ஊரு விட்டு ஊரு வந்து’ வாலி, காக்க காக்க, காதல் கொண்டேன், காதல், பெருசு, விருமாண்டி உள்ளிட்ட திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தேவிப்பிரியா தனது சொந்த ஊரான தேனிக்கு சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் பெரம்பலூர் அருகே பாடலூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகை தேவி பிரியாவின் காரின் டயர் பஞ்சரானதாக கூறப்படுகிறது. இதையடுத்து,உடனடியாக டிரைவர் முத்து கணேஷ் காரை சாலையோரமாக நிறுத்தி காரின் பஞ்சரான டயரை கழற்றிவிட்டு ஸ்டெப்னி டயரை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்

அப்போது , பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த நடிகை தேவிபிரியாவின் காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் டிரைவர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். நடிகை தேவி பிரியா அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமும் இன்றி உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் , அவருடன் பயணம் செய்த உதவியாளர் திவாகர் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சின்னத்திரையுலக வட்டாரத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.