சமீபகாலமாக திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகைகளை ஒரு சில நபர்கள், நடிகைகளின் உடல் பாகங்களை வேண்டுமென்றே ‘ஜூம்’ செய்தும், அநாகரீகமான கோணங்களிலும் படம்பிடித்து, அந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் சப்தமி கௌடா, ஆஷிகா ரங்கநாத், மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் ஒன்றிணைந்து தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து முதலில் குரல் கொடுத்த நடிகை ருக்மிணி வசந்த், ‘”திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம்.பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன… மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன.ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.நாங்கள் இங்கே கலைக்காகவும், சினிமாவிற்காகவும் இருக்கிறோம்.வேண்டுமென்றே இப்படிப் பரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டிக்கிறோம். அவைக் கண்ணியத்தை மீறுவதாகும்.
இதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது.இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இந்தப் பிரச்னை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்”.
என்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவரைத் தொடர்ந்து ‘காந்தாரா’ பட நடிகை சப்தமி கௌடா கூறுகையில், “நாங்கள் எங்கள் கலையை மக்களிடம் கொண்டு செல்லவே மேடையில் நிற்கிறோம். ஆனால், எங்கள் உடலை முன்னிலைப்படுத்தும் வகையில் கேமரா கோணங்களை அமைப்பது அவமானகரமானது. இதுபோன்ற அநாகரீகச் செயல்களை இனி சகித்துக்கொள்ள மாட்டோம்” என ஏகத்துக்கும் கொந்தளித்துள்ளார் .நடிகை ஆஷிகா ரங்கநாத் “மரியாதையை இயல்பாக்குவோம் – மீறலை அல்ல. வேண்டுமென்றே ஜூம்-இன் செய்வதும் பொருத்தமற்ற கோணங்களும் அவமரியாதைக்குரியவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். இது ஒவ்வொரு நடிகையும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்பதால் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.