*கதைச்சுருக்கம்* – இத்தாகா (Ithaca) என்ற பாறைகள் நிறைந்த கிரேக்கத் தீவின் அரசனான ஒடிசியஸ், தனது புகழ்பெற்ற ‘ட்ரோஜன் குதிரை’ தந்திரத்தின் மூலம் அகமெம்னானுக்காகப் போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமக்கஸ், ஒடிசியஸ் போருக்குச் சென்றபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தவன், தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறான். போர் முடிந்து ஒடிசியஸ் தாயகம் திரும்பும் வழியில், அவரது பயணத்திற்குக் கடவுள்களாலும், அசுரர்களாலும், பெரும் புயல்களாலும், பேரழிவு நிகழ்வுகளாலும் இடையூறு ஏற்படுகிறது. இத்தாகாவில், டெலிமக்கஸ்க்கும், அவனது தாயார் பெனிலோப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது. தந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு டெலிமக்கஸ் அவரைத் தேடுகிறான். அதே நேரத்தில், ஓநாய்களைப் போன்ற கொடூர குணம் கொண்ட இளவரசர்களும் பிரபுக்களும், டெலிமக்கஸின் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டு, ஒடிசியஸ் திரும்புவார் என்ற நம்பிக்கையைக் கைவிட்டு, தங்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அரசனாக்குமாறு ராணி பெனிலோப்பைத் தொடர்ந்து வற்புறுத்தி நெருக்கடி கொடுக்கின்றனர்.