சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.
நகைச்சுவை, நடனம், இசை என கலகலப்பாக வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும், “நாலு பேர் சந்தோஷமா சிரிக்கிறாங்கன்னா, எதுவும் தப்பில்லை” என்ற வசனம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
நான்கு பேர் மகிழ்ச்சியாகச் சிரித்தால் அதில் தவறில்லை என்ற இந்த வசனம், படத்தின் மையக் கருத்தையும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதன் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
குடும்பத்துடன் இணைந்து சிரித்து மகிழும் வகையில் #FamilyLaughter, #HolidayLaughter என்ற கருப்பொருளில் உருவாகியுள்ள Moonwalk படம், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது.
Behindwoods நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ள மூன்வாக், நகைச்சுவை, இசை, நடனம் மற்றும் காதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
மேலும், சதீஷ் குமார், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா சங்கர், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதுடன், இதன் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். பிரபுதேவாவின் நடனமும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் இணைந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன், திவ்யா மனோஜ், பிரவீன் ஏலக் ஆகியோர் Behindwoods Productions சார்பில் தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லரும் மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.