ஒருவர் மீதுள்ள விருப்பு, வெறுப்புகளை அவருக்காக கூடுகிற கூட்டத்தை வைத்து கணக்குப் போட முடியும். மகன் உமாபதியை நாயகனாக்கி அப்பா தம்பி ராமையா இயக்கிஇருக்கிற படம்தான் மணியார் குடும்பம். அவரது சொந்த வாழ்க்கையின் பாதிப்புதான் இந்த படம். இசை வெளியீட்டு விழாவுக்காக வந்திருந்த அரங்கம் கொள்ளாத கூட்டத்தையும் கலந்து கொண்ட வி.ஐ.பி.க்களையும் பார்த்தபோது அவர் மீது எவ்வளவு மரியாதை, மதிப்பு வைத்திருக்கிறது இண்டஸ்ட்ரி என்பது தெரிந்தது..இயக்குநர்கள் பாக்யராஜ், சீனு ராமசாமி,பிரபு சாலமன் ,கரு.பழனியப்பன்,சிறுத்தை சிவா,சேரன், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான பி.சக்திவேலன், சத்யஜோதி தியாகராஜன்,நடிகர் ராதாரவி, சூரி , ஜெயபிரகாஷ்,ஆர்.கே.சுரேஷ் ..இப்படி நீ…..ள….மாகிறது பட்டியல்.
தம்பி ராமையாவின் அம்மாவைப் பற்றி பேச்சாளர்கள் நினைவு கூர்ந்தபோது ராமையாவினால் கட்டுப்படுத்தி கொள்ள முடிய வில்லை.கண்ணீர் பெருக்கெடுத்தது.
இயக்குநர் பிரபு சாலமன் பேசியபோது எத்தகைய விசுவாசிகள் திரை உலகில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
“2007-ல் நான் மைனாவை படமாக்க நினைத்தபோது கையில் இருந்தது கேமராவும் பிலிமும்தான்! மைனாவில் நடிப்பதற்காக மிகவும் நம்பியிருந்த நடிகர் ஒருவர் என்னை மோசம் செய்வார் என எதிர்பார்க்கவில்லை..அன்று நாங்கள் படப்பிடிப்புக்காக பார்த்துப் பார்த்து செலவு செய்தோம். தினமும் ஐயாயிரம்தான். எங்கள் நிலைமை அந்த நடிகருக்கு நன்றாகத் தெரியும். அவரைத்தான் நம்பி இருந்தோம் என்பது அவருக்கும் புரியும். அவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வீதம் சம்பளம் கேட்டார்.
நான் தம்பி ராமையாவை ஒரு விழாவில்தான் சந்தித்திருக்கிறேன். எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை.அவர்தான் எனக்கு நினைவுக்கு வந்தார் கதையைச்சொன்னேன் ,எங்கப்பாவின் படத்துக்கு முன் நின்று அழுதிருக்கிறேன்.அவரும் அவங்கப்பா படத்துக்கு முன் நின்று அழுதிருக்கிறார்.மைனாவில் நடித்ததை மறக்க முடியாது. அவர் எம்.ஆர்.ராதா,எஸ்.வி.ரெங்காராவ் அளவுக்கு வரக்கூடியவர்.அவ்வளவு விஷயம் இருக்கு.
இசை அமைப்பாளராக ஆகவேண்டும் என்று சென்னைக்கு வந்த அவர் அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்திருக்கிறார் ” இப்படி பல நிகழ்வுகளை சொல்லி கூட்டத்தை நெகிழ வைத்தார் இயக்குநர் பிரபு சாலமன்.