சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா என்று கேட்டு அவ்வைக்கே சோதனை கொடுத்தது ஒரு சிறுவன்தான். முருகனே பாலகன் வடிவில் வந்ததாக சொல்கிறது புராணம். ஒன்பது வயது சிறுமி சினிமாவுக்குப் பாடல் எழுதுகிறாள் என்றால் அவளை வாழ்த்தி வரவேற்கவேண்டும்.தமிழில் புலமை,சங்க இலக்கியத்தில் ஆர்வம் ,லண்டனில் வாழ்கிறாள் என்றால் அவள் நிச்சயம் ஈழத்துப் பெண்ணாகத் தான் இருக்கமுடியும்.அவர்கள்தான் தமிழை நேசிக்கிறார்கள். நாமோ …?
சரி சங்கதிக்கு வருவோம்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் முதன் முறையாக தமிழில் திரைப் படமாகிறது.இப்படத்திற்கு “பகைவனுக்கு அருள்வாய் “என்கிற பெயர் .
கதைக்கு திரை வடிவம் கொடுத்து இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அனீஸ். இவர் “திருமணம் எனும் நிக்காஹ் “என்ற படத்தை இயக்கியவர் .
ஃபர்பிள் ப்ரேம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். 96’புகழ் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இரண்டு முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றில் சதீஸ் நீநாசம் அறிமுகமாகிறார். (என்னய்யா பெயர் இது?) பரபரப்பாக பேசப்பட்ட கன்னட படமான ‘லூஸியா”என்ற படத்தில் நடித்தவர். இன்னொரு கதாபாத்திரத்தில் சரண் சஞ்சய் நடிக்கிறார். இவர், சுசீந்திரன் இயக்கி வரும் “ஏஞ்சலீனா”படத்தில் நடித்து வருகிறவர்.
கதாநாயகி மற்றும் அனைத்து கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இப்படத்தின் படபிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.
இந்த படத்துக்கு கூடுதல் சிறப்பாக , அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமியை பாடல் ஆசிரியையாக அறிமுகபடுத்துகிறார்கள் . லண்டனில் வசிக்கும்
இவரின் தமிழ் ஞானமும் சங்க இலக்கிய அறிவும் ஏற்கனவே பாடல்களாலும் கவிதைகளாலும் யு டியூபில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது .
“பகைவனுக்கு அருள்வாய்” படத்தின் டைட்டில் லோகோவை டிசம்பர் 8-ம் தேதி ஸ்விட்சர்லாந்தில் , ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி நடத்தும் தங்க தமிழ் குரல் ரியாலிட்டி ஷோவில் வெளியிடுகிறார்கள் .
120 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியை அனன்யா ராஜேந்திரகுமாரே தொகுத்து வழங்குகிறார் .
“உலக தமிழர்களால் கவனிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் “பகைவனுக்கு அருள்வாய்” டைட்டில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இதில் நானும், இசை அமைப்பாளர் ஜிப்ரான், நடிகர் சரண் சஞ்சய் மூவரும் கலந்து கொள்கிறோம் . இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பதிவாகும்” என்கிறார் இயக்குனர் அனீஸ்.