எப்பவுமே சில நாட்டு நடப்பு நிகழ்வுகளை அவ்வளவாக கண்டுகொள்ளாத உலக நாயகன் இம்முறை கொதித்து எழுந்திருக்கிறார். காரணம் தமிழ்நாடு இதுவரை இது போன்ற பேரழிவை சந்திக்காததே காரணம்! இக் கோபத்தின் வெளிப்பாடு ஒரு ஆங்கில இணையதளத்தில் அப்படியே வெளியாகி இருக்கிறது. இவரின் கருத்துக்கள் சில அமைச்சர்களை பதில் அறிக்கையும் விட வைத்திருக்கிறது. கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,
ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாரித்துக் கட்டிய வரிப்பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.
எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, தங்களைக் கடவுளாக அறிவித்துக்கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகள் மீதும் நம்பிக்கை இல்லை. யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாரித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன் ஆனால் அது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை,பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்”கமலின் கோபம் நியாயமானது என்பது தான் தற்போது பலரது கருத்தும் என்கிறது கோலிவுட்!