இந்நிலையில் மறைந்த எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம், அவரிடம் அதிகமான சிகிச்சை கட்டணம் கேட்டதாகவும் இந்த பிரச்னையில் தமிழக அரசு, குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் தலையிட்டு தீர்த்து வைத்ததாகவும், சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
இந்நிலையில் இது குறித்து, எஸ்.பி.பியின் மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “அப்பாவுக்கு சிகிசசை அளித்த எம்ஜிஎம் மருத்துவமனை பற்றியும், அப்பாவின் சிகிச்சைக்கு மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வதந்திகள் துரதிர்ஷ்டவசமானது.
மேலும் நாங்கள் இன்னும் பணம் பாக்கி வைத்திருப்பதாகவும் இதற்காக தமிழக அரசிடமும், குடியரசுத் துணைத் தலைவரிடமும் கோரிக்கை வைத்ததாகவும் அவர் மகள் உதவியதாகவும் ஒரு செய்தி வலம் வருகிறது.. மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இவை அனைத்துமே வடிகட்டிய பொய். இதை யார்,ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை இது எப்படிப் பாதிக்கும் என்பது கூட புரியாமல், ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என தெரியவில்லை.
ஆனால் ஓன்று,இவர்கள் யாருமே எஸ்பிபியின் ரசிகர்களாக இருக்க முடியாது. இதுபோன்ற வதந்திகளைப் பரப்பும் நபரை எஸ்.பி.பி மன்னிப்பார். இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும், மருத்துவமனைத் தரப்பும் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறோம். எம்ஜிஎம் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும், எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் நன்றியுடன் இருப்போம். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும்.அதுவரை தயவுசெய்து யாரும் இது மாதிரியான வதந்திகளைப் பரப்பாதீர்கள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.