ஆருயிர் மனைவியை இழந்த துயரம் தாங்காமல் அவருக்கு சிலை செய்து வைத்து துன்பத்தை மறைத்துக்கொண்டு சிலர் வாழ்கிறார்கள்.
பெற்றோருக்கு சிலை செய்து வைத்து அவர்களை வணங்கி வருகிற பிள்ளைகளும் இருக்கிறார்கள்.அன்பும் பாசமும் நேசமும் வற்றி வருகிற காலத்தில் இப்படி சில அபூர்வ நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் வருகிறது.
கன்னடத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. நடிகர் அர்ஜுனின் மருமகன் முறை. இவர் நடிகை மேக்நா ராஜை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் .இவர்களின் மகிழ்ச்சியான மண வாழ்க்கையின் சாட்சியாக மேக்நாவின் வயிற்றில் கரு வளர்ந்தது.
நான்கு மாத சிசு. இந்த மகிழ்ச்சியான செய்தியை உற்றார் உறவுகளுக்கு சொல்வதற்காக நாள் பார்த்து வந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீர் மாரடைப்பு. உயிர் பறந்து சென்று விட்டது.
துயரத்தில் உறைந்திருந்த மேக்நாவுக்கு ஒரே ஆறுதல் வளர்ந்து வருகிற சிசுதான்! தனக்கு பிறக்கப்போவது கணவர்தான் என்கிற நினைப்புடன் வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு வளைகாப்பு நடத்தும் நேரம் வந்தது.
கணவரின் கட் அவுட்டை அருகில் வைத்து அந்த சுப நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் மேக்நா.