கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் நடித்த ‘நின்னிடாலே’, ‘ராஜகுமாரா’ மற்றும் யாஷ் நடித்த ‘மாஸ்டர் பீஸ்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹோமபிள் பிலிம்ஸ். இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது ‘ராஜகுமாரா’ திரைப்படம்.
தற்போது ஹோமபிள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது ஹோமபிள் பிலிம்ஸ். கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார் நடித்து வரும் ‘யுவரத்னா’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ மற்றும் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும் இணையும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.
இந்தியத் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக, அனைத்து மொழிகளிலும் தயாராகும் 3 படங்களைத் தயாரித்ததில்லை. அந்த சாதனையை இப்போது ஹோமபிள் பிலிம்ஸ் நிகழ்த்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’ படத்தை வெளியிட்டு வெற்றி கண்டதைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ படத்தையும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும் இணையும் படத்தையும் அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிடவுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் 2-ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ச்சியாக அனைத்து மொழி மக்களை ஆச்சரியமூட்டும் வித்தியாச கதைக்களங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வெளியிட ஹோமபிள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.