‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த அதிரடி!

 இந்தியத் திரையுலகில் அனைத்து மொழிகளிலும்  படங்களைத் தயாரிப்பது  மற்றும்  வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹோமபிள் பிலிம்ஸ்.
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் நடித்த ‘நின்னிடாலே’, ‘ராஜகுமாரா’ மற்றும் யாஷ் நடித்த ‘மாஸ்டர் பீஸ்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹோமபிள் பிலிம்ஸ். இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது ‘ராஜகுமாரா’ திரைப்படம்.

இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தங்களுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹோமபிள் பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிராகண்டூர்.இதற்காக ஹோமபிள் பிலிம்ஸ் தயாரித்த படம் தான் ‘கே.ஜி.எஃப்’. பிரசாந்த் நீல் அட்டகாசமான இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ வசூல் இந்தியத் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, கலை, வசனம் என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’. இப்படம் வெளியான 4 நாட்களிலேயே அதிக வசூல் செய்த கன்னடப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியது. இந்திய அளவில் பரிச்சயமான தயாரிப்பு நிறுவனமாகவும் வளர்ந்தது.

தற்போது ஹோமபிள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது ஹோமபிள் பிலிம்ஸ். கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார் நடித்து வரும் ‘யுவரத்னா’, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ மற்றும் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும் இணையும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.

இந்தியத் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக, அனைத்து மொழிகளிலும் தயாராகும் 3 படங்களைத் தயாரித்ததில்லை. அந்த சாதனையை இப்போது ஹோமபிள் பிலிம்ஸ் நிகழ்த்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1’ படத்தை வெளியிட்டு வெற்றி கண்டதைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ படத்தையும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும் இணையும் படத்தையும் அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிடவுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு டிசம்பர் 2-ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ச்சியாக அனைத்து மொழி மக்களை ஆச்சரியமூட்டும் வித்தியாச கதைக்களங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வெளியிட ஹோமபிள் பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.