கடந்த 2025-ஆம் ஆண்டு மராத்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘கோந்தல்’ (Gondhal), தற்போது அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுத் திரைக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமப்புறங்களில் திருமணத்திற்குப் பிறகு விடிய விடிய நடத்தப்படும் பாரம்பரிய வழிபாட்டுச் சடங்கான ‘கோந்தல்’ நிகழ்வை மையமாகக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
1970-களின் காலகட்டத்தில், மகாராஷ்டிராவின் ஒரு குக்கிராமத்தில் கதை தொடங்குகிறது. விருப்பமில்லாத திருமணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் ‘கோந்தல்’ சடங்கில் நாயகி இஷிதா தேஷ்முக் பங்கேற்கிறார். ஊர் தலைவர் தொடங்கி ஒட்டுமொத்த கிராமமும் கூடியிருக்கும் அந்த இரவு நேரக் கொண்டாட்டத்தில், பலரது மனதிலும் வெவ்வேறு திட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அப்பாவித்தனமும் இரக்க குணமும் கொண்ட புதுமாப்பிள்ளை யோகேஷ் சோஹோனி, தன் அழகு மனைவியுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க ஆவலோடு காத்திருக்கிறார். ஆனால், மணப்பெண் இஷிதாவோ தன் முன்னாள் காதலனுடன் அங்கிருந்து தப்பிச் செல்லத் துடிக்கிறார். இன்னொரு பக்கம், இஷிதா மீது மோகம் கொண்ட ஊர் தலைவரின் மகன் அவரை அடையத் திட்டமிடுகிறார். இவை அனைத்திற்கும் நடுவே, ஊர் தலைவரால் தன் மகனைப் பறிகொடுத்த ஒரு முதியவர், பழிவாங்கும் தருணத்திற்காகக் காத்திருக்கிறார். தெய்வீகச் சடங்கு ஒருபுறம் நடக்க, மறுபுறம் காதல், துரோகம், அதிகாரப் போட்டி என மனித மனங்களின் இருண்ட பக்கங்கள் மோதத் தொடங்குகின்றன. அந்த இரவின் மர்ம முடிச்சுகள் எப்படி அவிழ்ந்தன என்பதே மீதிக்கதை.
அப்பாவித்தனமான முகத்துடன் வலம் வரும் நாயகன் யோகேஷ் சோஹோனி, தன் மனைவியைப் பற்றி மற்றவர்கள் பேசும் இரட்டை அர்த்தப் பேச்சுகளைக் கூடப் புரிந்துகொள்ளாமல் அனைவரிடமும் அன்பு காட்டுகிறார். ஆனால், கதையின் இறுதிக்கட்டத்தில் அவர் எடுக்கும் விஸ்வரூபமும், கண்களாலேயே கோபத்தை வெளிப்படுத்தும் விதமும் ஒட்டுமொத்த அரங்கையும் அதிர வைக்கிறது. ஊரே வியக்கும் பேரழகியாக வரும் இஷிதா தேஷ்முக், தன் உடல்மொழியாலும் திமிரான பார்வையாலும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆண்களின் ஏக்கத்தைக் கிண்டலாகக் கையாள்வதும், காதலனுக்காகக் கணவனுக்குத் துரோகம் இழைக்கத் துணிவதுமாகத் தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். தெருக்கூத்து கலைக்குழுவின் மூத்தவரான பிவாபா கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிஷோர் கடம், தன் பழிவாங்கும் உணர்ச்சியை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற பதற்றத்தைப் படம் முழுக்கக் கடத்துகிறார். ஊர் தலைவராக சுரேஷ் விஸ்வகர்மா, அவரது மகனாக நிஷாத் போஹிர், நாயகியின் காதலனாக அஞ்சு பிரபு என அனைவரும் அந்தக் கிராமத்து மண்ணின் மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக இப்படம் ஒரு சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. தீப்பந்தங்கள் மற்றும் பூஜை விளக்குகளின் மெல்லிய வெளிச்சத்தில், இரவு நேரச் சடங்கை மிக யதார்த்தமாகப் படம்பிடித்துள்ள ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரி திரையில் பெரும் மாயாஜாலம் நிகழ்த்தியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசை, மராட்டிய கிராமத்து சடங்குப் பாடல்களோடும் தெருக்கூத்து வாத்தியங்களோடும் பார்வையாளர்களை அந்த ஊருக்கே அழைத்துச் செல்கிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெறும் ஒரு மெலடி பாடல் நெஞ்சை வருடுகிறது. நீளமான ‘சிங்கிள் ஷாட்’ காட்சிகளும், அதிக வசனங்களும் கொண்ட திரைக்கதை சற்றும் சலிப்புத் தட்டாமல் நகர படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாட்ரேயின் கச்சிதமான எடிட்டிங் கைகொடுத்துள்ளது.
ஒரு பண்பாட்டுச் சடங்கின் பின்னணியில், மனிதர்களின் உளவியல் போராட்டங்களை இணைத்து அழுத்தமான கிரைம் திரில்லரைக் கொடுத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் தேவகர். நமக்குப் பரிச்சயமில்லாத முகங்கள் நடித்திருந்தாலும், டப்பிங் படம் என்ற உணர்வே எழாத அளவிற்குத் தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களைத் திரையோடு கட்டிப்போடுகிறது திரைக்கதை. மொழி எல்லைகளைக் கடந்து நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு, இந்த ‘கோந்தல்’ நிச்சயம் ஒரு விருந்தாக அமையும்.












