வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக மற்றும் அமானுஷ்யப் பின்னணியில், அதிரடி கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய ஒரு மகாசக்தி வாய்ந்த தெய்வீகத் த்ரில்லர் கதைக் களமாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாயகி நயன்தாரா நேர்மையான ஒரு காவலராக பணிபுரிந்து வருகிறார். ஆனால், தனக்குள் மயிலாஞ்சி கிராமத்தின் காவல் தேவதையான ‘மூக்குத்தி அம்மன்’ குடிகொண்டிருப்பதோ அல்லது அவளது அருள் தன்னுள் நிறைந்துள்ளதோ ஆரம்பத்தில் அவருக்கே தெரியாமல் இருக்கிறது. மற்றொரு புறம், தீய அமானுஷ்ய சக்தியான சாத்தானின் முழு ஆதிக்கத்தைப் பெற்றுள்ள ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அவரது கணவர் துனியா விஜய் ஆகிய இருவருக்கும், மயிலாஞ்சி மூக்குத்தி அம்மனுக்கும் இடையே கடந்த 2000 ஆண்டு காலமாக ஒரு தீராதப் பெரும் பகை நிலவி வருகிறது. தங்களுக்கான பழிவாங்கும் சரியான காலத்திற்காகக் காத்திருக்கும் அந்தத் தீய சக்திகள், ஒன்பது கிரகங்களும் (Nine Planets) ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் ஒரு அரிய வானியல் நிகழ்வின் போது மீண்டும் பூமியில் பகை தீர்க்க மோதுகிறார்கள். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான், மூக்குத்தி அம்மன் 2.

தொழில்நுட்ப ரீதியாக இத்திரைப்படம் கண்கள் மிரள வைக்கும் அதிநவீன கணினி வரைகலை (VFX) மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சர்வதேசத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபி அமர்நாத் தனது அசாத்திய ஒளிப்பதிவின் மூலம் தெய்வீகப் பொலிவையும், சாத்தானின் அமானுஷ்யக் கோரத்தையும் காட்சிகளில் கச்சிதமாகக் கடத்தியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் துள்ளலான இசையும், அதிரடியான பின்னணி இசையும் படத்தின் ஒவ்வொரு விறுவிறுப்பான காட்சிக்கும் மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளன.
இப்படத்தில் யோகி பாபு மற்றும் ஊர்வசி ஆகியோரின் பிரமாதமான கூட்டணி நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளித்துள்ளது. இவர்களுடன் சுனில், ராஜ்கபூர், சிங்கம்புலி, இனியா, நந்தினி மைனா, அபிநயா, ஒய். ஜி. மகேந்திரன், பழ. கருப்பையா, விச்சு விஸ்வநாத், நிதின் சத்யா மற்றும் ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். மேலும், நடிகைகள் சினேகா மற்றும் குஷ்பூ ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். பரபரப்பான திரைக்கதையும், கண்கவர் ஆன்மீக சண்டைக்காட்சிகளும் நிறைந்த ‘மூக்குத்தி அம்மன் 2’, இந்த ஆண்டு திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக உருவெடுத்துள்ளது.












