சோனி விழா (Sony VIZHA) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ சமையல் நிகழ்ச்சியின் தீபாவளி சிறப்பு எபிசோட், சமையல் போட்டியைத் தாண்டி உணர்வுப்பூர்வமான உறவுகளைக் கொண்டாடும் மேடையாக மாறியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னணி நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்குப் போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்து அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
மாஸ்டர்செஃப் மேடையில் சமந்தா பயணித்த தருணங்களைப் பாராட்டும் வகையில், போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்காக ஒரு பிரத்யேகச் சிறப்புக் காணொளியைத் தயாரித்துத் திரையிட்டனர். இதைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட சமந்தாவுக்கு, குழந்தைகளுக்கான ஆடைகள், பொம்மைகள், ஓவியங்கள் மற்றும் சாக்லேட்டுகள் என அன்பான பரிசுகளை வழங்கி மேலும் ஆச்சரியப்படுத்தினர். இந்நிகழ்வில் போட்டியாளர் ஜனனி, தனது சகோதரி வாழ்க்கையின் இக்கட்டான காலகட்டத்தைச் சந்தித்தபோது, சமந்தாவின் வாழ்க்கைப் பயணமும் மன உறுதியும்தான் அவருக்குப் புதிய ஒளியைக் காட்டியதாகக் குறிப்பிட்டார். சமந்தாவின் தன்னம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட தனது சகோதரி, தற்போது ஒரு வெற்றிகரமான உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்றுநராகப் பணியாற்றி வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகை சமந்தா,
சென்னையில் உள்ள பல்லாவரத்தில் கழிந்த தனது குழந்தைப் பருவ வாழ்க்கையை நினைவுகூர்ந்தார். தனது வீட்டின் அருகே அமைந்திருந்த மலையுடன் பிணைந்துள்ள பல இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட அவர், திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களாக நடிக்கும் தனக்கு, இந்த மேடை மட்டுமே ‘சமந்தா’ என்ற தனிமனிதராகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உன்னத வாய்ப்பை வழங்கியதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது கர்ப்ப காலத்து அரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், மகப்பேற்றின் முதல் ஏழு மாதங்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும், அதன் பிறகு சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்ட பாரம்பரிய உணவுகளை ரசித்து உண்டதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய், “அப்படியானால் குழந்தை பிறப்பதற்கு முன்பே உலகத்து பலவிதமான உணவுகளின் சுவைகளைத் தாயின் மூலமாகவே அறிந்துவிட்டது” என்று நகைச்சுவையாகக் கூற, அரங்கமே கலகலப்பில் ஆழ்ந்தது. இந்த மாஸ்டர்செஃப் பயணத்தின் மூலம் தனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த சொத்து போட்டியாளர்களுடன் உருவான தூய்மையான நட்பும்தான் என்று குறிப்பிட்ட சமந்தா, இங்கு உருவான இந்த உன்னதமான நட்பு எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடிக்கும் என்று உறுதியளித்தார்.












