பொதுவாக சைக்கோ திரில்லர் படங்கள் என்றாலே, கண்களை மூடிக்கொள்ளும் அளவுக்குக் கொடூரமான வன்முறைக் காட்சிகள்தான் இருக்கும் என்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உண்டு. அந்த வழக்கமான பாதையிலிருந்து விலகி, வன்முறையே இல்லாமல் உளவியல் ரீதியாகப் பார்வையாளர்களை மிரட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா.
கேரளாவில் ஒரு ஏரி விபத்தில் சிறுவன் உயிரிழக்க, அதைச் சாதாரண விபத்தாக மூட நினைக்கும் காவல்துறைக்கு மத்தியில், அது திட்டமிட்ட கொலை என்பதைக் கண்டறிகிறார் கேரள அதிகாரி அர்ஜுன் தாஸ். இதே நேரத்தில் தமிழகத்தில் ஒரு சிறுவன் மாயமாகி, பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்படுகிறான். இரண்டு சம்பவங்களுக்கும் பின்னால் ஒரு சைக்கோ கொலையாளி இருப்பதை உணரும் அர்ஜுன் தாஸ், தமிழக அதிகாரி சஞ்சனா நடராஜனின் ஒத்துழைப்பு இல்லாமலேயே அடுத்த பலி நிகழ்வதற்குள் அந்த மர்ம நபரை எப்படி நெருங்குகிறார் என்பதே ‘ஜான் டோ’ படத்தின் கதை. அடையாளம் தெரியாத நபரைக் குறிக்கும் ‘ஜான் டோ’ என்ற பெயர், அடையாளம் தெரியாத சிறுவனின் மர்மத்தை அவிழ்க்கும் இக்கதைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.
முதல் முறையாகக் காக்கிச் சட்டை அணிந்திருக்கும் அர்ஜுன் தாஸ், வழக்கமான சினிமா போலீஸ் போலக் குற்றவாளிகளை அடித்து உதைக்காமல், உளவியல் ரீதியாகப் பேசி உண்மையை வரவழைக்கும் பாணியில் கவர்கிறார்; இருப்பினும் சில இடங்களில் அவரது வசன உச்சரிப்பு தெளிவில்லாமல் போவது சிறிய உறுத்தல். துடிப்பான அதிகாரியாக வரும் சஞ்சனா நடராஜன், கறாரான போலீஸாக மட்டுமல்லாமல் மெல்லிய காதல் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். இவர்களுடன் ஜாரா வினீத் சந்தோக், சிறுவன் நீரவ்.எஸ், ஸ்ரிஷ்டி.ஒய், விஜே அர்ச்சனா, படவா கோபி, கார்த்திக் குமார் என அனைவரும் கதாபாத்திரங்களுக்குப் பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன், அழகான கேரள நிலப்பரப்பை ஒருவித மர்மமும் அச்சமும் நிறைந்த களமாக மாற்றியுள்ளார். முஜீப் மஜீத் மற்றும் தி ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை, தேவையற்ற இரைச்சல் இன்றி அமைதியாலேயே திகிலைக் கூட்டுகிறது; “நான் போதுமா…” பாடல் மனதை வருடுகிறது.
மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியே இணைந்து எழுதியுள்ள திரைக்கதையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், விஜய் வெங்கடரமணனின் படத்தொகுப்பிலும் திரைக்கதை நகர்விலும் இன்னும் சற்று விறுவிறுப்பு இருந்திருக்கலாம். ஒரு சைக்கோ திரில்லருக்குரிய பரபரப்பு ஏற்படுவதற்குள்ளேயே, நாயகன் எந்தப் பெரிய சிக்கலும் இல்லாமல் குற்றவாளியை எளிதாக நெருங்கிவிடுவது திரைக்கதையின் அழுத்தத்தைக் குறைக்கிறது.
சில திரைக்கதை சறுக்கல்கள் இருந்தாலும், அருவருப்பான காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நாகரீகமான உளவியல் திரில்லரைக் கொடுத்த விதத்தில் ‘ஜான் டோ’ நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய முயற்சி.












