தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை ஒரு மருத்துவப் போராட்டத்தின் வழியே சொல்ல முயன்றிருக்கும் படைப்பே ‘அப்பா குட்டி’. ஆனால், நவீன காலத்திற்குப் பொருந்தாத பழைய திரைக்கதை உத்திகள் படத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கடத்தத் தவறுகின்றன.

ஊட்டியில் தன் மகளுடன் வசிக்கும் விஜய் ஆண்டனி, தன் மனைவி இறந்துவிட்டதாகக் கூறி வளர்கிறார். ஆனால், அந்தப் பெண் ஊட்டியிலேயே வேறு ஒரு குடும்பத்துடன் வாழ்வதைக் காணும் பள்ளி ஆசிரியை பிரித்தி அஸ்ராணி அதிர்ச்சியடைகிறார். இதற்கிடையில், மரபணு இரத்தக் கோளாறால் பாதிக்கப்படும் சிறுமிக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகிறது. அப்போதுதான் விஜய் ஆண்டனிக்குத் திருமணமே ஆகவில்லை என்பதும், அந்தக் குழந்தை ஆதரவற்றவள் என்பதும் தெரியவருகிறது. குழந்தையின் உண்மையான பெற்றோரைத் தேடும் விஜய் ஆண்டனியின் பயணமே மீதிக்கதை.
வழக்கம்போல் அமைதியான, சோகத்தைச் சுமக்கும் பாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பு, பல இடங்களில் செயற்கையாகவே தெரிகிறது. பிரித்தி அஸ்ராணியின் ஒருதலைக் காதலுக்கு அழுத்தமான காரணங்கள் இல்லாததால், அவரது கதாபாத்திரம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், சிறுமியாக நடித்திருக்கும் லிதன்யா தனது இயல்பான குறும்புகளாலும், கிளைமாக்ஸ் காட்சியின் உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார்.
இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய இரு துறைகளிலும் விஜய் ஆண்டனி தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார். ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால், ஸ்டெம் செல் தானத்தில் இன்று ஏற்பட்டுள்ள நவீன வசதிகளைத் தவிர்த்துவிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை சின்னத்திரைத் தொடர் பாணியில் இயக்குநர் மு. மாறன் நகர்த்தியிருப்பது பெரும் சோதனையாக அமைகிறது.
சில காட்சிகள் பொறுமையைச் சோதித்தாலும், சுவாரசியமான டிவிஸ்ட் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.













