
சட்டப் படிப்பை முடித்த கையோடு சாருகேஷைக் கரம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ், சென்னையின் தோல்வியே கண்டிராத மூத்த வழக்கறிஞர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறார். சூழல் காரணமாகத் தனது குருவான மிஷ்கினுக்கு எதிராகவே முதல் வழக்கில் வாதாடி வெற்றி பெறுகிறார் கீர்த்தி. இதன் மூலம் சட்ட உலகில் கவனம் பெற்றாலும், எதிர்பாராத உடல்நலக் குறைவால் ஏற்படும் கருச்சிதைவு அவரை மனரீதியாக முடக்குகிறது. வழக்கறிஞர் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, மீண்டும் தாய்மையடையும் முயற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்.
அமைதியாக நகரும் இவர்களின் வாழ்வில், ஷில்பா மஞ்சுநாத்தின் கொலை வழக்கு புயலைக் கிளப்புகிறது. செய்யாத குற்றத்திற்காகக் கணவர் சாருகேஷ் கைது செய்யப்பட, அவரை மீட்டெடுக்க மீண்டும் கருப்பு அங்கி அணிகிறார் கீர்த்தி சுரேஷ். தன்னை வீழ்த்திய சிஷ்யையைப் பழிவாங்கும் முனைப்போடு அரசுத் தரப்பு வழக்கறிஞராக எதிர்முனையில் நிற்கிறார் மிஷ்கின். மனைவியின் பாசமும், குருவின் வன்மமும் மோதும் இந்தச் சட்ட யுத்தத்தில் வென்றது யார் என்பதே படத்தின் மீதிக்கதை.
சாவித்திரியாகத் திரையில் தோன்றும் கீர்த்தி சுரேஷ், கணவனின் உயிரைக் காக்கத் துடிக்கும் மனைவியின் தவிப்பையும், நீதிமன்றத்தில் எதிராளியை எதிர்கொள்ளும் வழக்கறிஞரின் நிதானத்தையும் மிக நுட்பமாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். வசனங்களைத் தாண்டி அவரது பார்வையே பல இடங்களில் உணர்வுகளைக் கடத்துகிறது.
மூத்த வழக்கறிஞராக வரும் மிஷ்கின், தனது தனித்துவமான உடல்மொழியாலும், ஆழமான குரலாலும் நீதிமன்றக் காட்சிகளுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கிறார். ஒவ்வொரு அசைவிலும் பார்வையாளர்களைத் தன்னை உற்று நோக்க வைக்கும் அவரது அனுபவம் படத்திற்குப் பெரிய பலம்.
அப்பாவிக் கணவனாக சாருகேஷ் காதலிலும், சிறை வாசத்தின் வலியிலும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். இறுக்கமான கதைப்போக்கிற்கு இடையே, கீர்த்தியின் சீனியராகவும் பின்னர் உதவியாளராகவும் வரும் பாலசரவணன் அவ்வப்போது சிரிக்க வைத்து ஆசுவாசப்படுத்துகிறார். ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சாகா, தீபா சங்கர், மதுசூதன் ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.
நீதிமன்ற அறைக்குள் நடக்கும் விவாதங்களை வெறும் வசனங்களாக மட்டும் காட்டாமல், ஒளியமைப்பு மற்றும் கோணங்கள் வழியே ஒரு த்ரில்லர் உணர்வைக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட். புலனாய்வுத் திருப்பங்களையும், கதாபாத்திரங்களின் மனப் போராட்டத்தையும் அவரது கேமரா அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
சாம் சி.எஸ்-ன் பாடல்கள் பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசையில் அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக, உணர்வுப்பூர்வமான தருணங்களில் மென்மையான இசையாலும், வாதங்களின் போது வேகமான இசையாலும் கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் சற்று யூகிக்கும்படியும், சில இடங்களில் நம்பகத்தன்மை குறைந்தும் நகர்கின்றன. கீர்த்தி சுரேஷின் ஆரம்பகட்ட வாதங்களில் சினிமாத்தனமும், நாடகத்தன்மையும் சற்றுத் தூக்கலாகவே தெரிகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கொலை வழக்கின் பின்னணியில் ஒளிந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்க்கும் விதம் அத்தனை குறைகளையும் மறக்கடிக்கிறது.
முதல் பாதியின் சில சோர்வான காட்சிகளைக் கடந்து சென்றால், இரண்டாம் பாதியில் விரியும் சுவாரசியமான திருப்பங்களுக்காக ‘சத்தியவான் சாவித்திரி’யை நிச்சயம் ரசிக்கலாம்.













