“கும்பி காயுது , குடல் கருகுது ,குளு குளு ஊட்டி ஒரு கேடா ?”என்று ஆளும் கட்சிக்கு எதிராக முன்னொரு காலத்தில் திமுகழகம் போஸ்டர் ஒட்டியது..மேடைகளில் முழங்கினார்கள்.
அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி.!
தற்போது அதைப்போன்ற ஒரு சூழல் பாலிவுட்டில்.!
மாலத்தீவுக்கு சுற்றுலா செல்கிற திரைப்பட பிரபலங்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது மாலத்தீவு அரசு. அது சுற்றுலாவை பிரபலப்படுத்துவதற்காக. ! தங்கள் அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காக.!
இதை பயன்படுத்திக்கொண்டு இந்திய திரையுலக பிரபலங்கள் அங்கு உல்லாசப்பயணம் செல்கிறார்கள். அழகான கடலில் முக்கால் நிர்வாணமாக பிகினியில் தோன்றி அதை தங்களின் இன்ஸ்டராகிராமிலும் பதிவிடுகிறார்கள்.
இது இந்திய நாட்டில் நிலவும் தற்போதைய நிலையில் அவசியம்தானா, என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ராகுல் பிரீத் சிங் ,சமந்தா ,டாப்ஸி ,அலியா பட் ,திஷா பெதானி ,டைகர் ஷெராப் ,சாரா அலிகான் ,ஜான்வி கபூர் ஆகியோர் மாலத்தீவில் உல்லாசமாக இருந்ததை படங்களாக பதிவு செய்திருக்கிறார்கள்.
சக இந்தியர்கள் கொரானாவில் தினமும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். உயிர் காக்கும் ஆக்சிசன் பற்றாக்குறையினால் இந்தியாவே மூச்சடைத்துப்போய் இருக்கிறது. இத்தகைய சூழலில் உங்களுக்கு உல்லாசம் தேவையா,அதை படங்களாக வெளியிடுவதில்தான் உங்களின் பெருமை இருக்கிறதா ?என்கிற குமுறல் எழுந்திருக்கிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ,பிரபல எழுத்தாளர் ஷோபா டே ,சமூக ஆர்வலர் ரோகிணி ஆகியோர் இது பற்றிய தங்களது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
காசு பணம் உள்ளவர்கள் உல்லாசம் அனுபவிக்கிறார்கள் .அது அவர்களின் உரிமை. ஆனால் அதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்டலாமா?