மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு கடுமையாக இருந்தது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அவ்வப்போது ரஜினிகாந்த் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 19 ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய அரசின் அனுமதியோடு ரஜனிகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார்.
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் 2 வாரங்களுக்குமேல் அங்கு ஓய்வெடுத்த ரஜினிகாந்த் இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.சென்னை விமானத்தில் வந்த ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள், ‘தலைவா வாழ்க’ என கோஷமிட்டு வரவேற்றனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில்,தனக்கு மருத்துவ பரிசோதனை நல்லப்படியாக முடிந்தது என தகவல் தெரிவித்த ரஜினி அதன் பின் அங்கிருந்து தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடிக்கவேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும்,ரஜினி சம்பந்தப்பட்ட சில பேட்ச் ஒர்க் காட்சிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்பதால் அவரை வைத்து சில காட்சிகளை எடுக்க இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இக்கதையின் நிகழ்வு, கொல்கத்தாவை அடிப்படையாக வைத்திருப்பதால் அங்கு சென்று சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வருகிற 12 ஆம் தேதி சென்னையில் ரஜினி சம்பந்தப்பட்ட ‘சேஸிங்’காட்சி ஒன்றை முடித்து விட்டு கொல்கத்தா செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே உடனடியாக அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் முடிக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து விரைவில் தனது அடுத்த பட அறிவிப்பையும் அதிரடியாக அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.