“எடியூரப்பாவை நீக்கினால் கர்நாடகாவில் பிஜேபி வளராது,வாழாது “என்பது சுப்பிரமணியன் சுவாமியின் வாதம்.!
ஆனால் பிஜேபி மேலிடத்தில் யாரும் சு.சாமியை மதிப்பதேயில்லை. அவர் செல்லாக்காசு ஆகி வெகு காலமாயிற்று.!
எடியூரப்பாவின் மீது வளர்ந்த அதிருப்தி அதிகமாகியதே தவிர சமரசத்துக்கு வரவில்லை சட்ட மன்ற உறுப்பினர்கள்.அவர்கள் மோடியையே எதிர்கொள்ள தயாராக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
கடந்த சில வாரங்களாக பாஜக கட்சியினரிடையே புதிய முதல்வர் யார் என்கிற பரபரப்பிலேயே இருந்தார்கள். இன்று முடிவுக்கு வந்துள்ளது.
ஒரு சுருக்கத்தைப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் கடந்த 20 வருடங்களாக மக்களிடையே பாஜக வின் மொத்த உருவமாக பிரதிபலித்து வருபவர் பி.எஸ். எடியூரப்பா.
நான்காவது முறையாக முதல்வராக இருந்த அவருக்கு இந்த முறை கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு இருந்தது .
பி.எஸ். எடியூரப்பாவின் மகன் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக கூறி அமைச்சர்களும், எம் எல் ஏக்களும் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டு கட்சி மேலிடத்தில் சரமாரி புகாரளித்தனர்.
இதன் காரணமாக பாஜக தலைமை பி.எஸ். எடியூரப்பாவை மாற்றும் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து, கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று பி.எஸ். எடியூரப்பா, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.
அதற்கு முன்னதாக, பெங்களூருவில் உள்ள விதான் செளதா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “முதல்வர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியாகவே ராஜினாமா செய்கிறேன்,” என்றார்.
மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றி.
என்றும் கட்சிக்காக உழைப்பேன்,” என உணர்ச்சி மேலிட பேசினார்.