லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் , ஷிவானி நாராயணன் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
சமீபத்தில் விக்ரம் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் உலகநாயகனுக்கு வரும் நவம்பர் 7 ம் தேதி பிறந்தநாள் வருகிறது.இதையொட்டி முன்கூட்டியே இன்று உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளை விக்ரம் பட குழுவினர் விக்ரம் படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்கள்.
இதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,நடிகர் ஃபஹத் பாசில் , நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்,ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில் தனது பிறந்தநாள் குறித்து கமல் தனது டுவிட்டரில்,”“என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம்.பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன.இந்தக்கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட” என பதிவிட்டுள்ளார் .