இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது. கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
என் அம்மா ஒரு நாடக நடிகை, அப்போதே நாடகங்கள் நடிக்க செல்லும் போது என்னை அழைத்து செல்வார். அந்தப்பழக்கம் மூலமாக நான் சிறு வயதிலேயே விசு சார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அவர் படங்களில் மட்டுமே தொடர்ந்து 7 படங்கள் நடித்தேன். தொடர்ச்சியாக எனக்கு நிறைய வாய்புகள் குவிந்தன. மணிரத்னம் சாரின் நாயகன் படத்தில் சிறு வயது சாராவாக நடித்தேன். மும்பையில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு தங்கியது நடித்தது எல்லாமே மிகச்சிறந்த அமனுபவமாக இருந்தது.
மணிரத்னம் சாரை அந்தப்படத்திற்கு பிறகு நான் பார்த்ததே இல்லை. சுஹாசினி மேடத்தை பார்க்கும்போது இதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பேன். மணிரத்னம் சாரை சந்தித்து உங்கள் நாயகன் படத்தில் நான் நடித்தேன்..!ஞாபகம் இருக்கிறதா எனக்கேட்க வேண்டும் என கேட்க வேண்டும் என நினைப்பேன்.
என் வாழ்க்கை முழுவதுமே சினிமாவை சுற்றித்தான் இருந்தது. 16 வயதிலேயே நாயகியாகிவிட்டேன். கஸ்தூரிராஜா சார் எங்கள் வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தார்கள். அவரது ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்தப்படம் 100 நாட்கள் ஓடியது. அதைப்பார்த்து தான் பாலுமகேந்திரா சார் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க வைத்தார். அந்தப்படம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டது. கதை எல்லாம் சின்ன கதைதான். ஆனால் அதை அவர் படமாக்கிய விதம் தான் அற்புதமாக இருந்தது. பாலுமகேந்திரா எனக்கு ஒரு தந்தை போல் இருந்தார். எனக்கு திரைக்துறையில் மிகவும் பிடித்தவர்.
நான் இருந்த போது இருந்த சினிமா , இப்போது இல்லை, நிறைய மாறிவிட்டது. சினிமா டெக்னாலஜியில் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இப்போது சினிமா ஓடிடி மூலம் வீட்டுக்கே வருகிறது. கதைகளுக்கு நிறைய முக்கியத்துவம் தந்து, வெப் சீரிஸ்களும் வருகின்றன. எல்லோருக்குமான கதைகளும் இருக்கிறது. எனக்கு பொருந்தும் வித்தியாசமான பாத்திரங்களில் திரைப்படங்கள், வெப் சீரிஸில் நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் என்னை நீங்கள் மீண்டும், திரையில் பார்க்கலாம் என்றார்.