இந்நிலையில் இன்று (டிச.4) காலை கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,”
” என்னுயிரே… என்னுறவே… என் தமிழே….
மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என்னிரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பிதிரு சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அருமை நண்பர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் திரு. நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.
என் ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரைத்துறை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள்.
என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும், விக்ரம் திரைப்படக் குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும், விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்ன தானம், இரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக உளப்பூர்வமான நன்றிகள்.
பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டா என்று எனக்கு தெரியாது ஆனால் உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான் உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னை கொரோனாவிலிருந்து கரை சேர்த்து இருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு நன்றி.