எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த மர்மயோகி (1951) படத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ராம்நாத்தின் தாய் உள்ளம் (1952), விடுதலை (1954), சுகம் எங்கே (1954) போன்ற படங்களிலும் பணியாற்றினார். மட்டுமல்லாது எல்.வி.பிரசாத், ஏ.எஸ்.ஏ.சுவாமி, சுந்தர் ராவ் நட்கர்னி, டி.ஆர்.சுந்தரம் ஆகிய இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார்.
ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய சுதர்சன் (1951), நீதிபதி (1955), கற்புக்கரசி (1957), தங்கப்பதுமை (1959) படங்களிலும், சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கிய அழகி (1953), மகாதேவி (1957) படங்களிலும் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய வளையாபதி (1952), அலிபாபாவும் 40 திருடர்களும் (1956), பாசவலை (1956) படங்களிலும் முக்கியப் பங்காற்றினார்,
இந்திய சினிமாவையே உருவாக்கியவர்களில் ஒருவரான மாமேதை எல்.வி.பிரசாத்துடன் சேர்ந்தியங்கி அவர் தயாரித்து இயக்கிய ராணி (1952), மனோகரா (1954), மங்கையர் திலகம் (1955), பாக்கியவதி (1957) போன்ற படங்களிலும் பணியாற்றினார் சேதுமாதவன்.
இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்..
இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் 1962ல் மலையாளத்தில் வெளியான ‘கண்ணும் காரலும்’ படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.
மலையாளத்தில் 60 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஓடயில் நின்னு, யாக்ஷி, கடல்பாலம், அச்சனும் பாப்பையும், ஆர நாழிக நேரம், பனித்தீராத வீடு, அனுபவங்கள் பளிச்சென்று, புனர்ஜன்மம் மற்றும் ஒப்பல்…. என மலையாளத் திரைப்பட வரலாற்றில் பல முக்கியப் படங்களை இயக்கியுள்ளார்
சிறந்த இயக்குனருக்கான நான்கு விருதுகள் உட்பட பத்து தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஒன்பது கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.2009 ஜே.சி.டேனியல் விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் சேதுமாதவன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்
.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலை சாதனைகளால் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சேதுமாதவன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகுமார் கூறுகையில்,”அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் ‘மறுபக்கம்’. இப்படிப்பட்ட ஒரு காவியத்தை உருவாக்கியவர்தான் இயக்குநர் சேதுமாதவன். இந்திரா பார்த்தசாரதியின் “உச்சிவெயில்” என்ற குறுநாவலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டது. அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவு திரை உலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.