இது தொடர்பாக ஆதவ் கண்ணதாசன், சாந்தனு பாக்கியராஜ், மஹிமா நம்பியார், பாடலுக்கு நடனம் அமைத்த காயத்ரி ரகுராம் மாஸ்டர், இசையமைத்த ஜெரார்ட் ஃபெலிக்ஸ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தினர்.
அப்போது பேசிய ஆதவ் கண்ணதாசன்,” நானும் சாந்தனுவும் நீண்டகால நண்பர்கள். நான் நடித்த சில படங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக வெளியாகாமல் இருக்கும் நிலையில், இப்படி ஒரு பாடலை ஆல்பமாக செய்து வெளியிடலாமா என்று கேட்டப்போது மிக உற்சாகமாக ஒத்துக்கொண்டு, மிக இன்வால்வ்மெண்டோடு நடித்தும் கொடுத்தார். காதலன்,காதலி, ஒரு நிச்சயதார்த்தம் என்கிற சின்ன நிகழ்வை எடுத்துக்கொண்டு மிகுந்த ரசனையுடன் இப்பாடலை உருவாக்கியிருக்கிறோம். இப்பாடல் நிச்சயம் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும்’ என்றார்.
அடுத்து பேசிய மஹிமா நம்பியார்,” ஆதவை எனக்கும் ஐந்தாறு வருடங்களாகத் தெரியும் என்றாலும், அவருக்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார் என்பதை இந்த ஆல்பத்தில் நடித்தபோது தான் தெரிந்துகொண்டேன். முதலில் இந்தப் பாடலை அனுப்பி நடிக்க சம்மதமா என்று கேட்டபோது, தெரிந்த நண்பராயிற்றே என்பதற்காகத்தான் ஒத்துக்கொண்டேன். ஆனால் அவர் இயக்கத்தில் நடித்தப்போது, நண்பர் மட்டுமல்ல,.. நல்ல ரசனையான இயக்குநர் என்பதை உணர்ந்துகொண்டேன். நிச்சயம் அவர் நல்ல தரமான படத்தை விரைவில் இயக்கி முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிப்பார் என்றார்.
இந்த ஆல்பத்துக்கு இசையமைத்துப் பாடிய ஜெரார்ட் ஃபெலிக்ஸ் பேசுகையில் ‘ஸ்டாலின் தான் வர்றாரு’போன்ற ஒன்றிரண்டு அரசியல் பிரச்சாரப் பாடல்களுக்கு இசையமைத்த வகையில் பிரபலாமன நான், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்துக்குப் போகவேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்தபோது தான் ஆதவ் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது நான் அவருக்கு அனுப்பிய சில பாடல்களில் இந்த குண்டு மல்லி பாடலை செலக்ட் செய்தார். எனது பாடலை அவர் படமாக்கியிருப்பதை பார்க்கும்போது எனது சினிமா இசையமைப்பாளர் கனவு வெகு தூரத்தில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்’என்றார்.