கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார்.
பின்னணியிசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக ‘வலிமை’ படப் புகழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார். ‘டான்’ பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் பட தொகுப்பு பணிகளை கையாள, பிரமிப்பை உண்டாக்கும் சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக படக் குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.