இளையராஜாவின் அண்ணன் மகன் பாவலர் சிவன் மரணம்! பாரதிராஜா இரங்கல்!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மறைந்த பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் என்கிற பாவலர் சிவா(வயது 60). இவர் கிதார் இசைக்  கலைஞராக உள்ளார். பாண்டிசேரியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீர் நெஞ்சு வலியால் துடித்தவர் கட்டிலில் இருந்து கீழே  விழுந்தார். உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே  இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

பாவலர் சிவா மறைவு இளையராஜா குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாவலர் சிவாவின் சகோதரர் கடந்த 2020-ல் சிறுநீரக பிரச்சனை காரணமாக மரணம் அடைந்த நிலையில், தற்போது பாவலர் சிவாவும் மரணம் அடைந்திருப்பது இளையாராஜா,மற்றும் கங்கை அமரன் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாவலர் சிவனின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தீனா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாவலர் சிவாவின் மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரன்பு கொண்ட சிவா, உனது மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது. மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உன்னை இழந்து வாடும் பாவலர் சகோதரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் தீனா, பாவலர் சிவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.