அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் ” பல்லவபுரம் மனை எண் 666 ” என பெயரிடப்பட்டுள்ள ஹாரர் படத்தை தயாரித்துள்ளது. இதில்,ஈரம், அனந்தபுரத்து வீடு, அழகிய அசுரா போன்ற படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார்.ஆண்டவ பெருமாள், இருக்கு ஆனா இல்ல, பனிவிழும் நிலவு, துரிதம் போன்ற படங்களில் நடித்த ஈடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரேகா சுரேஷ், சுனில், மாலா, நேகா, ரக்ஷை, ஸ்ரீஜித், ராம்கி, சுதந்திரம், சோலை உள்பட பலர் நடித்துள்ளனர்
இப்படத்தின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ரிஷி கூறுகையில்,”வெளிநாட்டில் பணிபுரியும் தருண் (கிருஷ்ணா). அவனது மனைவி இறந்த பிறகு, தனது 6 வயது குழந்தை ஜனனியை (நேகா) கவனித்துக்கொள்ள, சினேகாவை (ஈடன்) திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் ஜனனி, சினேகாவை தன் தாயாக கருதாமல், சித்தியாகவே பாவிக்கிறாள். ஜனனி தன் தோட்டத்தில் இருந்த ரோஜா பூவுடன் உறவை வளர்த்து, அதை தன் தாயாக கருதி, அந்த ரோஜாவை அம்மா என்று அழைக்கிறாள்.
அந்த ரோஜா, ஓர் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தது. ஜனனி ரோஜாவின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள், அந்த ரோஜாவும், ஜனனியை தன் மகளாகவே கருதியது. ஒரு தாயாக, அனைத்து இன்பங்களையும், அரவணைப்பையும் ஜனனிக்கு கொடுக்கிறது. தன் மகளை பார்க்க தருண் சென்னைக்கு வருகிறான்.
அவன் தனது வீட்டிற்கு வந்தது முதல், பல்வேறு அசாதாரண நிகழ்வுகளையும், துன்பங்களையும், அந்த ரோஜா பூவில் உள்ள ஆன்மாவால் அனுபவிக்கிறான். ஏன் ஜனனி மீது அன்பு செலுத்தும் ஆன்மா, அவள் தந்தையை பழிவாங்கத் துடிக்கிறது? தருண் என்ன தவறு செய்தான்? தருண் அந்த ஆன்மாவிடம் இருந்து தப்பிப் பிழைத் தானா ? இல்லையா? என்பது தான் இப்படத்தின் திகில் கதை என்கிறார்.இவர் இயக்குனர் கே.பாலசந்தந்தரிடம் உதவி இயக்குனரா பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இப்படத்தின் ஒளிப்பதிவை வில்லாளன் கவனிக்க,மாருதி நம்பி இசையமைத்துள்ளார்.