பாரதிராஜா படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் பதிவு!

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ ஆகும்.

தற்போது ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.