நடிகர் சங்கத்தின் 67 வது ஆண்டு பேரவைக்   கூட்டம்! ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது ஆண்டு பேரவைக்   கூட்டம் வரும் 10 -ஆம் தேதி காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க  வளாகத்தில் நடக்கிறது இதில் நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள வசதியாக அன்று ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67 வது ஆண்டு பேரவைக்   கூட்டம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி (10.09.2023) காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க  வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்  எம். நாசர்  தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் நடிகர்,நடிகைகள் அனைவரும் கலந்து கொள்ள வசதியாக, நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆகிய அமைப்புகள் செப்டம்பர் 10 ஆம் தேதி (10.09.2023) அன்று   பொதுக்குழுவிற்காக படப்பிடிப்புகளை ரத்து செய்து விடுமுறை அளித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் கருணாஸ்  2022– 2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசித்து , தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்ப்பிப்பார். பொருளாளர் கார்த்தி , சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும், பொதுச்செயலாளர் விஷால் சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி உரையாற்றுகிறார் ,

துணைத்தலைவர்பூச்சி எஸ். முருகனின்  நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி நடிகர் / நடிகைகள் உட்பட நாடக கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். பொதுக்குழுவிற்கு வருகை தரும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு  நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது