இப்படத்தில் கவிதை வடிவில் இடம்பெறும் பாடலுக்கு டி ராஜேந்தர் குரல் கொடுத்துள்ளார்
விறுவிறுப்பான அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘ஒரு தவறு செய்தால்’ திரைப்படத்தை கே எம் பி பிக்சர்ஸ் மகேஷ் பாண்டியன் வழங்க மணி தாமோதரன் இயக்குகிறார். பல்வேறு குறும்படங்களையும் ஓவியா நடிப்பில் “மெர்லின்’ என்ற வெப் சீரிஸையும் இயக்கியுள்ள மணி தாமோதரன் மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிஸ் ஆசியா அழகி பட்டத்தை வென்றவரான உபாசனா ஆர் சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், எம் எஸ் பாஸ்கர், நமோ நாராயணன், ராம்ஸ், தேனி முருகன், பாரி, சுறா சுரேந்தர், ஸ்ரீதர், சந்தோஷ், தாஸ்மிகா லக்ஷ்மன் மற்றும் மகேஷ் பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சென்னை அசோக் நகரில் ஒரு வீட்டில் வசித்து வரும் நான்கு இளைஞர்கள் வாடகை தர முடியாத காரணத்தால் வீட்டு உரிமையாளரால் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். அதே அசோக் நகரில் சொந்தமாக வீடு கட்டுவோம் என்று சபதம் எடுத்து கோயம்பேடு செல்லும் இளைஞர்கள் அங்கு ஒரு சம்பவத்தை காண நேர்கிறது.
அது அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது, அவர்களால் அசோக் நகரில் வீடு கட்டும் அளவுக்கு சம்பாதித்து லட்சியத்தை அடைய முடிந்ததா, அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன ஆகியவையே ‘ஒரு தவறு செய்தால்’ திரைப்படத்தின் கதை சுருக்கமாகும். டொரன்டோ திரைப்பட விழாவில் இப்படம் விருதை வென்றுள்ளது.
திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த குழுவினர், “பரபரப்பான அரசியல் சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை தாங்கி வரும் :ஒரு தவறு செய்தால்’ நல்லதொரு கருத்தையும் சமுதாயத்திற்கு சொல்லும். மிகவும் சுவாரஸ்யமான முறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக இது இருக்கும்,” என்றனர்.
ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி ஏ ஆர் ரைஹானாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவரான கே எம் ரயான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கிருஷ்ணா மற்றும் மகேஷ் ஶ்ரீதரும் படத்தொகுப்பை விது ஜீவாவும் கையாண்டுள்ளனர். அந்தோணி தாஸ், பம்பா பாக்யா மாற்று சிவம் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். கவிதை வடிவில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பன்முக வித்தகரான டி ராஜேந்தர் குரல் கொடுத்து வலு சேர்த்துள்ளார்.
கே எம் பி பிக்சர்ஸ் மகேஷ் பாண்டியன் வழங்கும் மணி தாமோதரன் இயக்கியுள்ள பரபரப்பு அரசியல் கதைக்களம் கொண்ட திரைப்படமான ‘ஒரு தவறு செய்தால்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.