வடக்கனுக்கு தடைபோட்ட தணிக்கை குழு!
வெண்ணிலா கபடி குழு, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’,தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ உட்பட பல படங்களுக்கு கதை,வசனம் எழுதியுள்ள பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம், ‘வடக்கன்’. இப்படத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர். டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ளார். வடக்கில் இருந்து பிழைப்புக்காக இங்கு வரும் தொழிலாளர்களிடம் மனிதநேயத்தை வெளிக்காட்டுவதை போதிக்கும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரில்,”எங்க பாத்தாலும் வடக்கனுங்க வேலைக்கு வந்துட்டானுங்க’, ‘வடக்கனுங்கள அடிச்சு பத்தணும்; ஒருத்தன் கூட இருக்க கூடாது’, ‘வடக்கன் நாயே உன்ன கொல்லாம விடமாட்டேன்’ ஆகிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில்,தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்தைப் பார்த்த அதிகாரிகள், ‘வடக்கன்’ என்ற தலைப்பில் இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்தனர். இதையடுத்து இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து இயக்குனர் பாஸ்கர் சக்தி கூறுகையில்,’எங்கள் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளியாக உள்ள ‘வடக்கன்’ திரைப்படத்தின் தலைப்பை தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது ‘ரயில்’ என்று மாற்றப்பட்டுள்ளது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்’.என கூறியுள்ளார்