தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கம் கடும் கண்டனம்!
By
admin on July 30, 2024
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாகவும், நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிக்கை நடிகர் நடிகைகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,”தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தின் பத்திரிகை செய்தியில், நடிகர்கள் தொடர்பான பொதுத் தீர்மானம் மற்றும் நடிகர் தனுஷ் குறித்த தனித் தீர்மானம் தொடர்பான தகவல் எங்களுக்கு அதிர்ச்சியும், வருத்தமும்அளிக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து திருதனுஷ் மீது இதுநாள்வரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பதையும் அவர்மீது எந்தவித புகாரும் நிலுவையில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.இருதரப்பும் கலந்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு, எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றி, அதை பத்திரிகை செய்தியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டு இருப்பதை தொன்மையான, பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டிக்கிறது.
திரைத்துறையின் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கும்போது, திரைப்படங்களில் மிக பிரதான பங்காற்றும் எங்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் விதமாக, 01.11.2024 முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.அனைத்து தரப்பு திரைத் தொழிலாளிகளையும் பாதிக்கும் இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதியாக வலியுறுத்துகிறது.29.07.2024 பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட மற்ற தீர்மானங்களையும் மறுபரிசீலனை செய்து, நட்புறவு பாதிக்காமல் சுமூகமான தீர்வு காண தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வரும் என எதிர்பார்க்கிறோம்.இது தொடர்பாக விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம்,மற்றும் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்துக்கு இடையேயான மோதல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.