சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் பல வி.ஐ.பி.க்கள் தன்னிடம் கொடுத்து வைத்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார். இவரது சொத்துக்களை சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டுடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013-ம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், ‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன், அதாவது வருகிற 14-ந் தேதிக்குள் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன்பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், பணம் டெபாசிட் செய்தது குறித்து பட வெளியீட்டுக்கு முன் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.