உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘ஓம் சிவம்’!

தீபா பிலிம்ஸ் சார்பில் கிருஷ்ணா கே.என் தயாரிப்பில், இயக்குநர் ஆல்வின் இயக்கத்தில் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம் ‘ஓம் சிவம்’. இதில் புதுமுகம்  பார்கவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கன்னட நடிகை விரானிகா இப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ரவிகாளே மற்றும் ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, காக்ரோச் சுதி, யாஷ் ஷெட்டி, லக்‌ஷ்மி சித்தையா, அபூர்வஸ்ரீ, பல்ராஜ் வடி, உக்ரம் ரவி, வரதன், ரோபோ கணேஷ், ஹனுமந்தே கவுடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ’ராஜ் பகதூர்’ இயக்குநர் ஆல்வின் எழுதி இயக்கும் இப்படத்திற்கு விஜய் யார்ட்லி இசையமைக்கிறார். வீரேஷ் என்.டி.ஏ ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் ஆல்வின் கூறுகையில், “முன்பெல்லாம் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ காதலிக்க தொடங்கி விட்டால் அந்த காதலை சொல்வதற்கே பல வருடங்கள் எடுத்துக் கொள்வார்கள். அந்த காதல் மிக வலிமையானதாக இருந்தது. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் கண்டதும் காதல் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த காதலை உடனடியாக வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், காதலை உடனடியாக வெளிப்படுத்தி விடுபவர்கள் அந்த காதலை காப்பாற்ற முடியாமல் விட்டுவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு காதல் கதை தான் ‘ஓம் சிவம்’.19 முதல் 20 வயதுடைய நாயகன் நாயகியை காதலிக்கிறார். காதலுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் நாயகனின் காதல் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக, அவரது காதலி இறந்து விடுகிறார். காதலியின் இறப்பால் தடுமாறும் நாயகனின் வாழ்க்கை திசை மாற, திடீரென்று இறந்த காதலி உயிருடன் வருகிறார். அதன் பிறகு நாயகனின் திசை மாறிய வாழ்க்கை என்னவானது?, இறந்த காதலி எப்படி உயிருடன் வந்தார்? என்பதை நான் லீனர் முறையில், வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதிரடி ஆக்‌ஷனோடு சொல்லியிருக்கிறோம்.” என்றார்.