நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி!

எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்து இருந்தார் ,. அவரது புகாரை பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊனுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கொத்தமங்கலம் மாவட்ட நீதிமன்றத்தில் எர்ணாக்குளம் டி.ஒய்.எஸ்.பி தாக்கல் செய்தார்.இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்பது உறுதியாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிவின் பாலி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முறையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.