கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘கலகலப்பு’. இதில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம், ‘கலகலப்பு-2 என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி அப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் ஜீவா, ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் மூன்றாம் பாகமாக ‘கலகலப்பு 3’ உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்றாம் பாகம் குறித்து நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கலகலப்பு 3’ ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும்,இப்படத்தை தங்களது அவ்னி சினிமேக்ஸ் பட நிறுவனம், ‘ராவண கோட்டம்’ படத்தை தயாரித்த துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவியுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும்,இப்படத்தின் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது