ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘பராரி’ . ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் எழில் பெரியவேடி பேசுகையில், ” என்னுடைய உதவி இயக்குநர்கள் இல்லாமல் இந்தப் படம் இல்லை. இந்தப் படத்தை ‘ஜிப்ஸி’ பட சமயத்திலேயே முடித்துவிட்டேன். நான் பிற தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி முடிக்கும் வரை ராஜூமுருகன் வெளியே காத்திருப்பார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் என தெரியவில்லை. நான் கதை சொன்ன எல்லோருக்குமே கதை பிடித்திருந்தது. ஆனால், ஏதோ ஒரு இடத்தில் தயக்கம் இருந்தது. பின்புதான் ராஜூமுருகன் சார் ஹரியை உள்ளே கொண்டு வந்து இரண்டு பேரும் சேர்ந்து படத்தைத் தயாரித்தார்கள். அவர் இந்தப் படத்திற்காக எடை குறைத்தார். திருவண்ணாமலை மக்களையும் உள்ளே கொண்டு வந்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். கதைக்காக அனைத்து நடிகர்களுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். ‘ஜோக்கர்’ படத்தில் இருந்தே ஷான் ரோல்டன் எனக்கு நல்ல பழக்கம். அவரும் பாடலாசிரியர் உமாதேவியும் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்த பூமிக்கு நாம் எல்லோருமே விருந்தினர்கள் தான். எதுவுமே நமக்கு சொந்தம் கிடையாது. நாம் பூமியை விட்டு போகும்போது எதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் ‘பராரி’ படத்தின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்