நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என தொடர்ந்து தனது பிரமாண்ட படைப்புகளின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜையோ சமீபத்தில் ஐதராபாத்தில் ராஜ மவுலி அலுவலகத்தில் எளிமையாக நடந்தது. இப்படத்திற்காக மகேஷ் பாபு தனது உடல் எடையை குறைத்துள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ப்ரியங்கா சோப்ரா ஐதராபாத் வந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனிடையே இயக்குநர் ராஜமௌலி இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவரது பதிவில், பின்னணியில் சிங்கத்துடன், கையில் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு நடிகர் மகேஷ் பாபு, “ஒரு வாட்டி கமிட் பண்ணிட்டனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன்” என ரிப்ளை செய்துள்ளார். இதற்கிடையே ராஜமௌலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு அனுமனாக நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை வரும் 2027ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.